செய்திகள்
தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.65½ லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2021-03-09 00:11 GMT   |   Update On 2021-03-09 00:11 GMT
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்
சென்னை:

சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது 23), சென்னையை சேர்ந்த புஷ்பராஜ் (28), ஜாபர் அலி (43) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து காஜா மொய்தீன், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து தலா 560 கிராமும், புஷ்பராஜிடம் இருந்து 300 கிராமும் என 3 பேரிடம் இருந்தும் ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 420 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News