தமிழ்நாடு
பொன்னையன்

அ.தி.மு.க.வில் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம்- முன்னாள் அமைச்சர் பொன்னையன்

Published On 2021-12-02 09:58 GMT   |   Update On 2021-12-02 09:58 GMT
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என யாரும் விரும்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறி உள்ளார்.
சேலம்:

அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகருமான மு.தம்பிதுரையின் இளைய மகள் நம்ரதா-கவுதம் திருமணம் சேலம் சூரமங்கலம் மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.விற்குள் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம். சசிகலா அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்தார்.

அ.தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். அ.தி.மு.க.வின் இரு கண்களாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளனர். கட்சியிலிருந்து அன்வர்ராஜாவை நீக்கியது சரியான முடிவு. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும் என யாரும் விரும்பவில்லை.

கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
அ.தி.மு.க.
அமோக வெற்றி பெறும். முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. ஒரு வழக்கில் கூட எதிர்தரப்பினர் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க. கொடியை சாலையில் செல்பவர்கள் பயன்படுத்துவது போல சசிகலா பயன்படுத்துகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News