உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாடகைக்கு காரை எடுத்து நூதனமாக திருடிய ஒடிசா வாலிபர்

Published On 2022-01-15 08:50 GMT   |   Update On 2022-01-15 08:50 GMT
சேலத்தில் வாடகைக்கு காரை எடுத்து நூதனமாக திருடி சென்ற ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார்
சேலம்:

சேலம் நரசோதிபட்டி பெருமாள் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநில வாலிபர் நிலமாதபத்தா ( 23) என்பவர் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை அருகே உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை பார்வையிட செல்லவேண்டும் என்று கூறி 2000 ரூபாய் வாடகை பேசினார்.

மேலும் அந்த பணத்தை ஏ.டி.எம்.-ல் இருந்து எடுத்து கொடுப்பதற்காக மாணிக்கத்தை அவர் வாடகை காரில் அழைத்து கொண்டு சேலம் புதிய பஸ்நிலையம் வந்தார். பின்னர் அவர் ஏ.டி.எம். கார்டை மாணிக்கத்திடம்  கொடுத்து பணத்தை எடுக்க சொல்லியுள்ளார்.

மாணிக்கம் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை. வாடகை காரை  நிலமாதபத்தா திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு அனைத்து காவல் நிலைய சோதனை சாவடிகளில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஆத்தூர் பைபாஸ் சாலையில் குமரகிரி அருகே சாலையோரம் காரை நிறுத்தி, அதில் நிலமாதபத்தா குடி போதையில் மயங்கி கிடந்தார். அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார், கார் நிற்பதை பற்றி பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை மீட்டனர்.  ஒடிசா வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News