செய்திகள்
கோப்பு படம்

தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம் பர்ஸ் திருடிய 2 பெண்கள் கைது - சிறையில் அடைப்பு

Published On 2019-11-05 10:40 GMT   |   Update On 2019-11-05 10:40 GMT
அவினாசி அருகே பஸ்சில் தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம் பர்ஸ் திருடிய 2 பெண்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
அவினாசி:

ஈரோடு மாவட்டம் நொச்சிகுட்டையை சேர்ந்தவர் பிரவீனா. இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் நொச்சிகுட்டையிலிருந்து அவினாசிக்கு பஸ்சில் வந்தார். அப்போது அவரின் அருகே 2 பெண்கள் உள்பட பலர் நின்று பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் பிரவீனா அவினாசி வந்ததும் இறங்கினார்.

அப்போது தன் கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தார். அதில் வைத்திருந்த பர்சை காணவில்லை. அந்த பர்சில் நிதிநிறுவனத்தின் லாக்கர் சாவியை வைத்திருந்தார்.

இதனால் அதிர்ச்சியான இவர் சம்பவம் குறித்து அவினாசி போலீசில் புகார் கொடுத்தார்.போலீஸ் துணை சூப்பிரண்டு பரமசாமி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் பர்சை திருடியது ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பஸ் நிலையத்தை சேர்ந்த பாலு என்பவரின் மனைவி லட்சுமி (வயது31 ), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி நதியா (21) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களை அவினாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் பிரவீனா சென்ற பஸ்சில் ஏறியதாகவும், அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்த பர்சை திருடினோம். ஆனால் அந்த பஸ்சில் பணம் எதுவும் இல்லை. சாவி மட்டுமே இருந்ததால் அதனை திருப்பூர் பகுதியில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டோம் என்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று சாக்கடையில் கிடந்த பர்சை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News