செய்திகள்
கரூர் வணிகவரித்துறை அலுவலகம் முன்பு பெண் அலுவலர்கள் பொங்கல் வைத்தபோது எடுத்த படம்.

வணிகவரித்துறை அலுவலகம்- அரசு பள்ளியில் பொங்கல் விழா

Published On 2020-01-14 18:07 GMT   |   Update On 2020-01-14 18:07 GMT
வணிகவரித்துறை அலுவலகம்-அரசு பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் இசை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கரூர்:

கரூரில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில் கரூர், சென்னிமலை, வெள்ளகோவில், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வணிகவரித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதற்கு துணை ஆணையர் அருணாபாரதி தலைமை தாங்கினார். வணிகவரி அலுவலர் சுகவனேஸ்வர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பின்னர் பானை உடைத்தல், கயிறு இழுத்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வணிகவரித்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். மாலையில் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதேபோல், கரூர் கோவை ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தாந்தோணி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை சுமதி தலைமை தாங்கினார். ஆசிரியை செல்லபாபு பொங்கல்விழா குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதையடுத்து சுவாமிக்கு பொங்கல் படைத்து அனைவரும் வணங்கினர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர்கள் சிலர் கும்மி பாட்டு பாடி நடனம் ஆடினர். முடிவில் உதவி ஆசிரியர் சிவசக்தி நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான மாணவ-மாணவிகளும் பாரம்பரிய உடையான வேட்டி-சேலையில் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிநிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News