ஆன்மிகம்
பாலமலை அரங்கநாதர் கோவிலில் பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் பச்சை ஆடை அணிந்து குதிரை மீது செல்லும் காட்சி.

பாலமலை அரங்கநாதர் கோவிலில் பச்சை ஆடை அணிந்து பெருமாளின் பரிவேட்டை உற்சவம்

Published On 2021-04-29 08:12 GMT   |   Update On 2021-04-29 08:12 GMT
பாலமலை அரங்கநாதர் கோவிலில் பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் பச்சை ஆடை அணிந்து குதிரை மீதேறி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருமங்கையாழ்வார் வைபவமும் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெற்றன.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பாலமலை உள்ளது. இந்த மலையின் மீது அரங்கநாதர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த விழாவையொட்டி 10 நாட்கள் உற்சவம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த கோவில் தேர்த்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்குள்ள ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அன்னவாகனம், அனுமந்த வாகனம், கருடவாகனம் என ஒவ்வொரு நாளும் பெருமாள் எழுந்தருளினார்.

தொடர்ந்து செங்கோதையம்மன் அழைப்பு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவத்தில் செங்கோதை, பூங்கோதை தாயார்களுடன் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

அதன்பிறகு 10 பேர் மட்டுமே பங்கேற்ற தேர் வடம் கோவிலை சுற்றி வந்தது. இறுதியாக பரிவேட்டை உற்சவத்தில் பெருமாள் பச்சை ஆடை அணிந்து குதிரை மீதேறி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருமங்கையாழ்வார் வைபவமும் தெப்போற்சவமும், தீர்த்தவாரியும் நடைபெற்றன.
Tags:    

Similar News