செய்திகள்
கறிக்கோழி

பல்லடத்தில் கறிக்கோழி விற்பனை வீழ்ச்சி

Published On 2020-09-28 09:50 GMT   |   Update On 2020-09-28 09:50 GMT
புரட்டாசி மாதம் என்பதால் பல்லடத்தில் கறிக்கோழி விற்பனை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.92-க்கு விற்பனையாகிறது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக கோழிப் பண்ணைத் தொழில் உள்ளது. கோழிப் பண்ணைத் தொழில் 2 வகையானது. ஒன்று முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி, மற்றொரு வகை கறிக்கோழி ஆகும்.

பல்லடம் பகுதியில் உள்ள கோழி பண்ணையாளர்கள் கறிக்கோழி வளர்ப்பிலேயே அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். இங்கு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

கறிக்கோழி நுகர்வை பொறுத்து விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக சீராக இருந்த கறிக்கோழி கொள்முதல் விலை தற்போது புரட்டாசி மாதம் என்பதால் குறைந்துள்ளது.

கேரளாவில் மழை பெய்வதால் அங்கு கறிக்கோழி அனுப்ப முடியவில்லை. தமிழகத்தில் புரட்டாசி மாதத்தில் மக்கள் விரதம் இருந்து பெருமாளை தரிசிப்பார்கள். இதனால் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாகவே சரிவடைந்து காணப்படுகிறது. கடந்த 19-ந் தேதி ரூ.104-க்கு இருந்த கறிக்கோழி கொள்முதல் விலை தற்போது ரூ.92-க்கு விற்பனையாகிறது.

புரட்டாசி மாதம் முடிந்த பிறகு தான் கறிக்கோழி விலை படிப்படியாக உயரும் என்ற நம்பிக்கையோடு உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News