செய்திகள்
மாணவர் இசக்கிமுத்து

கடன் வாங்கி படிக்கும் பிளஸ்-2 மாணவர்: வட்டி கட்ட பட்டறை வேலைக்குப் போகும் சோகம்

Published On 2021-07-22 07:41 GMT   |   Update On 2021-07-22 10:30 GMT
ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கி அதன்மூலம் படித்து வருகின்றனர். ஏழை மாணவர்கள் ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்க முடியாமல் உள்ளனர்.

விளாத்திகுளம்:

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில்   ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக மாணவர்கள் ஸ்மார்ட்போன்கள் வாங்கி அதன்மூலம் படித்து வருகின்றனர். ஏழை மாணவர்கள் ஆன்லைன் படிப்பிற்காக செல்போன் வாங்க முடியாமல் உள்ளனர்.

இதனால் பல்வேறு இடங்களில் சிறு வயதிலேயே மாணவர்கள் வேலைக்கு சென்று அதன்மூலம் வரும் பணத்தில் செல்போன் வாங்கி பயிலும் பரிதாபநிலை உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவர் இசக்கிமுத்து (வயது 17) என்பவர் படிப்புக்காக வட்டிக்கு பணம் பெற்று செல்போன் வாங்கி உள்ளார். அதனை செலுத்துவதற்கு பட்டறைக்கு வேலைக்கு செல்கிறார். இதுகுறித்து மாணவர் இசக்கிமுத்து கூறியதாவது:-

கடந்த ஆண்டு கொரோனோ ஊரடங்கு காரணமாக 10-ம் வகுப்பு தேர்வு நடத்தப்படவில்லை. அந்த தேர்வில் நான் 260 மதிப்பெண் எடுத்தேன்.

அதன் பின்னர் 11-ம் வகுப்புக்கு வரலாறு பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தேன். 11-ம் வகுப்பு பாடத்தை அருகே உள்ள நண்பர்கள் வீட்டுக்கு சென்று, அவர்களின் செல்போனுக்கு ஆசிரியர்கள் அனுப்பும் குறிப்புகள் மற்றும் அசைன்மென்டுகளை செய்து வந்தேன்.

தொடர்ந்து 12-ம் வகுப்புக்கான பாடங்களின் குறிப்புகள் மற்றும் அசைன் மென்டுகளை ஆசிரியர்கள் வாட்ஸ்-அப்பில் அனுப்ப தொடங்கிவிட்டதால் எனது தாயிடம் செல்போன் கேட்டேன். அவர் வட்டிக்கு பணம் வாங்கி ரூ.13 ஆயிரத்துக்கு புதிய செல்போன் ஒன்றை எனக்கு வாங்கிக்கொடுத்தார்.

இந்த கடனை அடைக்க நான் பகலில் வெல்டிங் பட்டறைக்கும், கட்டிட வேலைக்கும் செல்கிறேன். இதில் வாரம் ரூ.600 வரை கிடைக்கும். செல்போனுக்கு வாரம் ரூ.1,200 வரை செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை எனது தாய் செலுத்துகிறார்.

எனது தாய் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அதற்கு 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறவேண்டும். போலீசாக வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக பயிற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இசக்கி முத்துவின் தாய் கூறியதாவது:-

எனது கணவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். எனது குழந்தைகள் இசக்கிமுத்து, இளவரசி, இளைய பாரதி ஆகியோரை நான் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறேன். முதலில் கட்டிட வேலைக்கு சென்றேன். இப்போது தையல் வேலை செய்து வருகிறேன். இதில் மாதம் ரூ.7 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது.

கடந்த மாதம் இசக்கிமுத்து செல்போன் வேண்டும் என கேட்டபோது, கடன் இருக்கிறது அதனை முதலில் அடைத்தால் தான் வேறு கடன் வாங்க முடியும் என்றேன். உடனே அவன் வேலைக்கு சென்று, பணம் தருவதாக கூறி வெல்டிங் பட்டறை வேலைக்கு சென்று வருகிறான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News