செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை - சீரான குடிநீர் வழங்க கோரிக்கை

Published On 2019-05-14 17:51 GMT   |   Update On 2019-05-14 17:51 GMT
சீரான குடிநீர் வழங்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுப்பதற்கு வசதியாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று திங்கட்கிழமை என்பதால் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கோரிக்கை மனுக்களை மனு பெட்டியில் போட்டு சென்றனர்.

நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரம் அருகே உள்ள கொத்தன்குளம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஷில்பாவிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் ஊர் கோபாலசமுத்திரம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்டது. எங்களுக்கு பஞ்சாயத்து சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் மூலம், 2 நாட்களுக்கு ஒரு முறை காலை நேரத்தில் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த மின்மோட்டார் பழுதடைந்து விட்டதால், தற்போது குடிநீர் கிடைப்பது இல்லை. எனவே நாங்கள் தற்போது எங்கள் ஊரில் உள்ள ஒரு குளத்தில் இருந்து எங்கள் அன்றாட தேவைக்கான குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருகிறோம். அந்த குளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே எங்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை தூர்வார வேண்டும். மேலும் எங்கள் ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியின் பின்பகுதியில் உள்ள பாலம் சேதமடைந்து காணப்படுகிறது அதனையும் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், “நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மேலும் பாளையங்கோட்டை பகுதியில் இருந்து நெல்லை டவுன், பழைய பேட்டை போன்ற இடங்களில் ஏராளமானோர் கடைகள் மற்றும் ஓட்டல்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் சென்று வருவதற்கு வசதியாக பாளையங்கோட்டை மகராஜ நகர் ரவுண்டானாவில் இருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரை பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருநங்கை கஸ்தூரி, கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், “எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. எனது கணவர் சரண்பாபுவுடன் 4 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தேன். அதன் பிறகு அவர் மாயமாகி விட்டார். தற்போது எனது கணவர் நாகர்கோவிலில் இருப்பதாக தெரிகிறது. அவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News