செய்திகள்
அயோத்தி ராமர் கோவில் மாதிரி தோற்றம்

500 ஆண்டுகளுக்கு பின் ராமஜென்ம பூமி பகுதியில் ஏற்றப்படும் 5 லட்சம் மண் விளக்குகள் - உ.பி. மந்திரி தகவல்

Published On 2020-11-07 11:47 GMT   |   Update On 2020-11-07 11:47 GMT
தீபோற்சவ விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு முதல்முறையாக 500 ஆண்டுகளுக்கு பின் ராமஜென்ம பூமி பகுதியில் 5 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. 

இதைத்தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பெயரில் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட ராமஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு உள்ளது. 

இதையடுத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இதற்கிடையில், தீபாவளியை கொண்டாடும் விதமாக உத்தரபிரதேசத்தில் ஆண்டு தோறும் தீபோற்சவ நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தீபோற்சவம் நவம்பர் 12 முதல் நவம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான தீபோற்சவ நிகழ்ச்சியின் போது, 500 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அயோத்தி ராம ஜென்ம பூமியில் 5 லட்சம் மண் தீபங்கள் ஏற்றப்படும் என உத்தரபிரதேச ற்றுலாத்துறை மந்திரி நீல்கந்த் திவாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மந்திரி நீல்கந்த் கூறியதாவது:-

500 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு இல்லையென்றால் இந்த ஆண்டுக்கான தீபோற்சவத்தில் கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டிருக்ககூடும். 

ஆனாலும், இந்த ஆண்டுக்கான தீபோற்சவத்தை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளோம். 

இந்த ஆண்டு தீபோற்சவத்தின் போது அயோத்தி ராம ஜென்ம பூமியில் 5 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட உள்ளது. ராமஜென்ம பூமி பகுதியில் கடந்த 500 ஆண்டுகளாக நடைபெறாமல்  நிலுவையில் இருந்த இந்த நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறவுள்ளது.

என்றார்.
Tags:    

Similar News