செய்திகள்
உழவர் சந்தை திறக்கப்பட்டு செயல்பட்டதை படத்தில் காணலாம்.

6 மாதங்களுக்கு பிறகு பெரம்பலூரில் உழவர் சந்தை மீண்டும் திறப்பு

Published On 2020-10-14 08:07 GMT   |   Update On 2020-10-14 08:07 GMT
பெரம்பலூரில் 6 மாதங்களுக்கு பிறகு உழவர் சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் மதனகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இதற்கு அருகில் செவ்வாய்க்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தை உள்ளது. பெரம்பலூர் நகரில் கொரோனா பரவலுக்கு காரணியாக இருந்ததாக கூறி உழவர் சந்தை கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மூடப்பட்டது. இதேபோல் வாரச்சந்தையும், தினசரி காய்கறி மார்க்கெட்டும் மூடப்பட்டன.

இந்நிலையில் உழவர் சந்தை அருகே பிரதான சாலையின் இருபுறத்திலும் காய்கறி வியாபாரிகள் கடைகள் வைத்து, காய்கறிகள் மற்றும் கனி வகைகளை விற்பனை செய்து வந்தனர். பின்னர் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறி சாலையோரம் இயங்கி வந்த கடைகள் உழவர் சந்தை அருகே உள்ள திடலுக்கு மாற்றப்பட்டன.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் உழவர் சந்தை திறக்க வேண்டும் என்று பெரம்பலூர் நகர மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 6 மாதங்களுக்கு பின்னர் உழவர் சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

மேலும் உழவர் சந்தை திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கடைகள் வழக்கம் போல் இயங்கின.

173 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட இந்த சந்தையின் முதல் நாளான நேற்று குறைவான எண்ணிக்கையில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் வந்து, தங்களது காய்கறிகளை விற்பனை செய்தனர். காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைவாக காணப்பட்டது.

இருப்பினும் ஓரிரு நாட்களில் முன்பிருந்த வழக்கமான பரபரப்பை உழவர் சந்தையில் காணலாம் என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News