வழிபாடு
தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்ட கள்ளழகர்

தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்ட கள்ளழகர்

Published On 2022-04-15 02:47 GMT   |   Update On 2022-04-15 02:47 GMT
சித்திரை திருவிழாவில் கண்டாங்கி பட்டு உடுத்தி தங்கப்பல்லக்கில் நேற்று இரவில் மதுரைக்கு கள்ளழகர் புறப்பட்டார். நாளை, வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இதையொட்டி, அழகர்கோவில் விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. நேற்று கள்ளழகர் மேளதாளம் முழங்க, பரிவாரங்களுடன் கோவில் யானை முன்னே செல்ல கோவிலை விட்டு கள்ளழகர் புறப்பட்டார். மாலை 6.15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற கோஷத்துடன் வெளியே வந்தார்.

இதைதொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.. இதையடுத்து கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்பு, வளைதடிகள் ஏந்தி கள்ளர் திருக்கோலத்தில் இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் மதுரையை நோக்கி பக்தர்கள் வெள்ளத்தில் கள்ளழகர் புறப்பட்டார்.
மதுரை வரும் வழியில் பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, உள்ளிட்ட பல மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். முன்னதாக பக்தர்கள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்தினர். இன்று கள்ளழகர் மதுரை வந்தடைகிறார். பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடக்கிறது.

மேலும் இன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் குதிரை வாகனத்தில் சாத்துபடி ஆனதும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, நாளை(சனிக்கிழமை) அதிகாலையில் 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் மதுரை வருவதால் வழி நெடுகிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Tags:    

Similar News