செய்திகள்
அப்துல்கலாம்

அப்துல்கலாமின் மாணவ பருவமும்... தேச சுதந்திர கொண்டாட்டமும்...

Published On 2020-10-15 04:14 GMT   |   Update On 2020-10-15 07:42 GMT
கனவு காணுங்கள். நல்ல விதமான கனவு காணுங்கள். அந்த கனவுகள் நிறைவேறும் வகையில் முயற்சி செய்யுங்கள் என்று மாணவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 89-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அப்துல்கலாம், சிறுவயதில் ராமேசுவரத்தில் படித்த பள்ளியின் மீது அதிக பற்று வைத்திருந்தார். அந்த பள்ளிக்கூடம் மண்டபம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி ஆகும். அங்கு கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி அப்துல்கலாம் வருகை தந்தார். அந்த பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்தார்.


அப்போது இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக தமிழரசி பணி புரிந்தார். கலாம் பங்கேற்ற அந்த நிகழ்ச்சி குறித்து அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நண்பர் டாக்டர் விஜயராகவன். அவர் கலாம் படித்த பள்ளியில் நூலகம் தொடங்க ஏராளமான புத்தகங்களை வாங்கி கொடுத்தார். அவரது அழைப்பின் பேரில் நூலகத்தை திறந்து வைப்பதற்காக அப்துல்கலாம் வருகை தந்தார்.

நூலகத்தை திறந்து வைத்த பின்பு மாணவர்கள் மத்தியில் கலாம் பேசினார். இந்த நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் என்றும் மறக்க முடியாதவை. அதே போன்றுதான் அவரது அற்புதமான பேச்சும் அமைந்திருந்தது. அது இன்றும் எனது நினைவுகளில் உள்ளன. அதை இப்போது விரிவாக கூறுகிறேன்.

கலாம் பேசியது இதோ:-

“மாணவ செல்வங்களாகிய நீங்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். நான் சிறு வயதில் பள்ளியில் படித்த நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டேன். கனவு காணுங்கள். நல்ல விதமான கனவு காணுங்கள். அந்த கனவுகள் நிறைவேறும் வகையில் முயற்சி செய்யுங்கள். பாடப்புத்தகம் மட்டுமின்றி, எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும். நமக்கு சிறந்த அறிவை கொடுப்பது, நாம் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும்தான். தினமும் பள்ளிக்கு வரும் போது கவலை இல்லாமல் ஆர்வமுடன் வர வேண்டும். மாணவர்களாகிய உங்களிடம் உள்ள தனிப்பட்ட திறமைகளை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். வருங்காலம் உங்கள் கையில்தான் உள்ளது.



நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களையும் எப்படி படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். ஒரு மாணவன் பாட புத்தகத்தை மட்டும் படித்து பெரிய ஆளாக வர முடியாது. மாணவன் எல்லா கலைகளிலும் ஆர்வமுடன் வர ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்க வேண்டும். நான் என்னை எப்படி உருவாக்கி கொண்டேன் என்பதை நான் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை ஆசிரியர்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். அறிவியல் தொடர்பான புத்தகங்களை படித்து மனித உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்தின் செயல்பாடு பற்றி தெரிந்து கொண்டு, அதை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பண்டைகால வரலாற்று புத்தகங்களை படித்து, தெரிந்து கொள்வதோடு அதையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும். தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழில் அதிக ஆர்வத்தை ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நான் 5-வது வகுப்பு படித்தபோது ராமேசுவரம் கடற்கரையில் படுத்தபடி வானத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது வானில் பறவைகள் பறப்பதை பார்த்தேன். நாம் ஏன் இதுபோல் வானில் விமானத்தில் பறந்து செல்வது போன்று ஆராய்ச்சி செய்யக்கூடாது? என்று தோன்றியது. விண்ணியல் தொடர்பான பலவிதமான ஆராய்ச்சி எண்ணங்களை எனக்கு இந்த ராமேசுவரம் கடற்கரைதான் கொடுத்தது. எனது அனைத்து முன்னேற்ற பாதைக்கும் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் தூண்டுகோலாக இருந்தனர்.

இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் கலாமின் பேச்சு அமைந்திருந்ததாக தலைமை ஆசிரியை தமிழரசி தெரிவித்தார்.



ராமேசுவரத்தில் 5-ம் வகுப்பு வரை படித்து, அதன் பின்னர் உயர்நிலை படிப்பை ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் முடித்தார். அந்த பள்ளிக்கும் பின்னாளில் கலாம் சென்றுள்ளார். இதுகுறித்து அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் ராக்லாண்ட் மதுரம் கூறியதாவது:-

ராமநாதபுரத்தில் உள்ள சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1946 முதல் 1950 வரை அப்துல்கலாம் படித்தார். அவர் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய போதும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பின்பும் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தோம். இருக்கையில் அமர மறுத்த அவர், பள்ளி மைதானத்தில் இருந்த மிகப்பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து பள்ளிப்பருவ நினைவுகளை நினைவுகூர்ந்தார். ஆசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவரது பெட்டி படுக்கை வைத்திருந்த இடத்தை பார்த்தார். அந்த இடத்தில் தங்கியிருந்த சிராஜுதீன் என்ற மாணவனை வாழ்த்தினார். அவர் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோதுதான் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அன்று நாடு விடுதலை அடைந்த செய்தியை அகில இந்திய வானொலியில் அறிவித்தபோது, அதை மாணவர்களுடன் கூட்டமாக அமர்ந்து கேட்டதையும், கொண்டாடியதையும் மகிழ்ச்சியுடன் அப்போது எங்களிடம் நினைவு கூர்ந்தார். தேசத்தலைவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் எங்களிடம் கூறினார்.

இவ்வாறு கலாம் நிகழ்ச்சி அனுபவங்களை ஆசிரியர் ராக்லாண்ட் மதுரம் கூறினார்.
Tags:    

Similar News