ஆன்மிகம்
பெண்கள் வழிபாடு

சகல செல்வங்களையும் அருளும் அற்புதமான விரதங்கள்

Published On 2020-09-03 06:01 GMT   |   Update On 2020-09-03 06:01 GMT
இந்துக்களின் முக்கியமான வழிபாடுகளில் விரதங்களும் ஒன்று. சகல செல்வங்களையும் அருளும் அற்புதமான விரதங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கௌரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி  விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங்களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.

ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக  உள்ள விரதம்.

தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம்.

அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
Tags:    

Similar News