செய்திகள்

மெலட்டூர் அருகே விவசாயி ஏ.டி.எம். எண்ணை வாங்கி ரூ.35 ஆயிரம் மோசடி - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2019-03-12 16:09 GMT   |   Update On 2019-03-12 16:09 GMT
தஞ்சை மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறி விவசாயியிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

மெலட்டூர்:

காலத்துக்கேற்ப மோசடியில் புதுபுது யுக்திகளை கையாள்கின்றனர். படிக்காத பாமர மக்களிடம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுகிறோம் என்று நடித்தும் வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று ஏ.டி.எம். ரகசிய எண்களை அறிந்தும் மோசடியில் ஈடுபடும் கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வருகிறது.

இதுபற்றி பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறி விவசாயியிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேலசெம்.மங்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. விவசாயி.

இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் உங்களது வங்கி ஏ.டி.எம் காலாவதியாகிவிட்டது. அதனை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு நாராயணசாமியும் நான் வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் செல்போனில் பேசியவர் அவருடைய ஏ.டி.எம். பின் நம்பரை கேட்டுள்ளார், நாராயணசாமியும் பின் நம்பரை கொடுத்துள்ளார்.

பின்னர் அம்மாபேட்டையில் உள்ள வங்கி கிளைக்கு சென்று ஏ.டி.எம். காலாவதியாகி விட்டது குறித்து வங்கி மேலாளரிடமும், தனக்கு வந்த செல்போன் தகவலையும் கூறியுள்ளார். அதற்கு உங்களது வங்கி கணக்கில் தற்போது பணம் இருப்பு இல்லை, பணம் வந்ததும் வாருங்கள் என கூறி அனுப்பிவிட்டார்.

இந்நிலையில் நெல்அறுவடை செய்து அதனை கொள்முதல் நிலையத்தில் விற்ற தொகை ரூ.1 லட்சத்து 800 நேற்று காலை நாராயணசாமி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதனை அறிந்த நாராயணசாமியும் பாபநாசம் சென்று ஏ.டி.எம். மூலம் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை எடுத்தார். பணம் எடுத்த சிறிது நேரத்தில் நாராயணசாமியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. வங்கியிலிருந்து வருவதாக நினைத்து வங்கிக்கு சென்று, அங்கு தன்னுடைய சேமிப்பு கணக்கு புத்தகத்தினை வரவு செலவை பிரிண்ட் எடுத்த போது, நாராயணசாமிக்கே தெரியாமல் அவருடைய கணக்கில் இருந்து ஐதராபாத்தில் இருந்து முதலில் ரூ.5 ஆயிரம், பின்னர் ரூ.9999, பின்னர் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.34,999 ஐ ஆன்லைன் மூலமாக எடுத்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தன்னுடைய வங்கி கணக்கை முடக்கி வைத்தார்.

பின்னர் வங்கி கிளையிலும், மெலட்டூர் போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக நாராயணசாமி புகார் செய்தார். #tamilnews

Tags:    

Similar News