செய்திகள்
பிரதமர் மோடி

ஒருங்கிணைந்த செயல்பாடே நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை- பிரதமர் மோடி

Published On 2021-02-20 05:51 GMT   |   Update On 2021-02-20 05:51 GMT
ஒருங்கிணைந்த செயல்பாடே ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு கொண்டு வரப்பட்டது. அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது.

நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பாக ஆட்சி மன்ற குழு உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் அக்குழு இயங்கி வருகிறது. அனைத்து மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச கவர்னர்கள், மத்திய மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் அதில் இடம்பெற்றுள்ளனர்.

ஆட்சி மன்ற குழுவின் முதல் கூட்டம், கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி நடைபெற்றது. அதன்பிறகு ஆண்டுதோறும் அதன் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் கொரோனா தாக்கம் காரணமாக நடைபெறவில்லை.

இந்தநிலையில், நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழுவின் 6-வது கூட்டம்  இன்று காணொலியில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். மாநில முதல்-மந்திரிகள் பலர் பங்கேற்றனர்.

இதுவரை மாநிலமாக பங்கேற்று வந்த காஷ்மீர், இந்த தடவை, யூனியன் பிரதேசமாக பங்கேற்றது. காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசம் முதல்முறையாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டது.

விவசாயம் , உட்கட்டமைப்பு, உற்பத்தி, மனித வள மேம்பாடு உள்ளிட்டவை பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் கூறியதாவது:

* ஒருங்கிணைந்த செயல்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை.

* தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்குகின்றன.

* இந்தியாவின் சுயசார்பு இந்தியா திட்டம் உலகத்திற்கே உதவியாக இருக்க போகிறது.

* தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு நாம் பெரும் உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News