இந்தியா
பலி

ஆந்திராவில் கோவிலில் பானகம் குடித்த 3 பக்தர்கள் பலி?- 33 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2022-04-15 09:08 GMT   |   Update On 2022-04-15 09:08 GMT
கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பானகம் மற்றும் அப்பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் உள்ளிட்டவைகள் பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் ஆலகட்ட மண்டலம் ஜம்புலதின்னே கிராமத்தில் ராமர் கோவில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை ராமநவமியை யொட்டி நிகழ்ச்சிகள் நடந்தது. கிராம மக்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு கோவில் சார்பில் பானகம் வழங்கப்பட்டது. பானகம் குடித்த சிறிது நேரத்தில் பக்தர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் ஆலகட்டா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் சிகிச்சை பலனளிக்காமல் பக்தா (வயது72) என்பவர் இறந்தார். இதையடுத்து ஒரு சிலர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றனர்.

கடந்த புதன்கிழமை சன்டென்னா (80), அரசு ஆஸ்பத்திரியிலும், அஸ்வினி (17) தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஒரு சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 பேர் பலியான சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் அலுவலர் பிரபாவதி தலைமையில் ஜம்புல தின்னே கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பானகம் மற்றும் அப்பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் உள்ளிட்டவைகள் பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வெளியே வந்த பிறகே பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பானகத்தில் ஏதாவது பிரச்சனையா அல்லது குடிநீரில் பிரச்சனையா என தெரியவரும் என மாவட்ட சுகாதார அலுவலர் பிரபாவதி தெரிவித்தார்.

Tags:    

Similar News