செய்திகள்

ஐ.எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை

Published On 2016-10-07 08:39 GMT   |   Update On 2016-10-07 08:39 GMT
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடையநல்லூர்:

கேரள மாநிலத்தில் கைதான ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளரான நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த சுபஹனி (வயது 31) என்பவரை கடந்த 4-ந் தேதி அதிகாலை தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடியாக கைது செய்தனர்.

கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்துள்ளார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளார்.

அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டுள்ளார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டுள்ளார். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தார்.

பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்துள்ளார். அப்போது இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளார். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார்.

விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர்.

அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர். அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இன்று காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர்.

கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

Similar News