ஆன்மிகம்
காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்ததை படத்தில் காணலாம்.

காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்த நெல்லையப்பர்

Published On 2019-10-26 03:46 GMT   |   Update On 2019-10-26 03:46 GMT
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்மனுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணிக்கும், இரவு 8 மணிக்கும் காந்திமதி அம்மன் வீதி உலா நடக்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து காந்திமதி அம்மன் தவக்கோலத்துடன் தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி, தெற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தார்.

நேற்று காலை 6 மணிக்கு கம்பாநதியில் காந்திமதி அம்மன் தவம் இருந்தார். 8.30 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். அவருடன் நெல்லை கோவிந்தரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளினார். பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் திருஞானசம்பந்தருக்கு, நெல்லையப்பரும், நெல்லை கோவிந்தரும் காட்சி கொடுத்தனர். அப்போது சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையப்பர், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் ஆகிய 3 பேரும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

மதியம் 12.25 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு, ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. அப்போது காந்திமதி அம்மன், சுவாமியை 3 முறை சுற்றி வந்தார். இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், காந்திமதி அம்மனுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர். அப்போது வானத்தில் ஒரு கருடன் வட்டமிட்டது.

இதைத்தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள், நெல்லை கோவிந்தர், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது. பேட்டை ரோட்டில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவில் அருகில் வைத்து திருஞானசம்பந்தருக்கு, ஞானபால் ஊட்டும் வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது. இன்று முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை அம்பாள் ஊஞ்சல் விழா நடக்கிறது. 29-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டிணப்பிரவேசம் வீதி உலா நடக்கிறது.

நெல்லை டவுன் தொண்டர் நயினார் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று காலை 11.30 மணிக்கு லாலா சத்திரம் முக்கில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், இரவில் கோவிலில் வைத்து கோமதியம்பாள் உடனுறை தொண்டர் நயினார் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவமும் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல் பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர், கோமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று மாலையில் ராமசாமி கோவில் திடலில் சுவாமி திரிபுராந்தீசுவரர், கோமதி அம்பாளுக்கு, ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

அப்போது கோமதி அம்பாள், சுவாமியை 3 முறை சுற்றி வந்தார். இதைத்தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவமும், தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவில் கோவிலில் வைத்து கோமதி அம்பாள் உடனுறை திரிபுராந்தீசுவரர் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவமும் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
Tags:    

Similar News