செய்திகள்
டி.டி.வி.தினகரன்

சசிகலாவுக்கு அ.ம.மு.க. ஆதரவு- டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

Published On 2021-10-23 07:03 GMT   |   Update On 2021-10-23 08:32 GMT
சசிகலா செல்லும் இடங்களில் அவருக்கு மிக பிரமாண்டமான வரவேற்பு அளிக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது.
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்த சசிகலா அ.தி.மு.க.வை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கடந்த 16-ந்தேதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவு இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். 17-ந்தேதி தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.



சசிகலா தனது நடவடிக்கை மூலம் அ.தி.மு.க. தொண்டர்களை தனது பக்கம் பெரிய அளவில் இழுத்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் இதுவரை அவரது முயற்சிகளுக்கு பெரிய அளவில் எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.

குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்ற போது தன்னை வரவேற்க பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் வருவார்கள் என்று சசிகலா எதிர்பார்த்தார். ஆனால் 2 ஆயிரம் பேர் கூட வரவில்லை. இதன் காரணமாக சசிகலா கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த வாரம் சசிகலா தஞ்சை, மதுரை மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சென்னையில் இருந்து 27-ந்தேதி புறப்படும் அவர் 27-ந்தேதி தஞ்சாவூரில் நடக்கும் டி.டி.வி.தினகரன் மகள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். 28-ந்தேதி மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.

அதற்கு அடுத்த நாள் (29-ந்தேதி) அவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சிகள் தவிர தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மேலும் சில நிகழ்ச்சிகளில் சசிகலா பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சசிகலா செல்லும் இடங்களில் அவருக்கு மிக பிரமாண்டமான வரவேற்பு அளிக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வை மீட்பதற்காக
சசிகலா
சரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அவர் தனது சொந்த முயற்சியால் அ.தி.மு.க.வை மீண்டும் வலிமைப்படுத்தும் திட்டங்களை கையில் எடுத்துள்ளார்.

அ.தி.மு.க.வை சீரமைத்து உத்வேகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. ஆகையால் எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவுக்கு முழுமையான அதரவு கொடுப்பார்கள்.

சசிகலா எந்த ஊருக்கு எப்போது சென்றாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் அவரை வரவேற்பார்கள். சசிகலா வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போது அவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சந்தித்து பேசுவார்கள்.

இவ்வாறு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் அ.ம.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இனி வெளிப்படையாக சசிகலாவை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது.


Tags:    

Similar News