ஆன்மிகம்
யாகசாலை பூஜைக்காக கொட்டகை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த காட்சி.

பெரியகோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைக்காக கொட்டகை அமைக்கும் பணி

Published On 2019-12-16 05:49 GMT   |   Update On 2019-12-16 05:49 GMT
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைக்காக கொட்டகை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். இந்த கோவிலின் கட்டிடக்கலை மற்றும் கலையம்சம் காரணமாக அதனை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் 1996-ம் ஆண்டு நடந்தது.

அதன் பின்னர் 24 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவில் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விநாயகர் சன்னதி கோபுரத்தில் சுத்தப்படுத்தப்பட்டு, சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் முருகன் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி ஆகியவற்றில் உள்ள கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்களை சீரமைக்க கோபுரங்கள் துணிகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்காக கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலை பூஜைக்காக பந்தல் 178 அடி நீளத்திலும், 108 அடி அகலத்திலும் அமைக்கப்பட உள்ளது. இதில் 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்படுகிறது.

இதற்காக பெத்தண்ணன் கலையரங்கத்தில் தகரத்தினால் ஆன கொட்டகை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இரும்பு குழாய்களை கொண்டு தூண்கள் நடப்பட்டுள்ளன.

இதே போல் பெரியகோவில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மண்டபத்தில் லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இந்த லிங்கங்கள் உள்ளஇடத்தின் தரைதளம் ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்பட்டன. அந்த தரைதளம் சீர் செய்யும் பணிகளும் நடைபெற்றன. இதே போல் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் கற்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்களில் சேதமடைந்தவற்றையும் சீர் செய்யும் பணிகள் நடைபெற்றன.
Tags:    

Similar News