செய்திகள்
பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகளே காரணம் - பிரகாஷ் ஜவடேகர்

Published On 2020-02-27 11:04 GMT   |   Update On 2020-02-27 11:04 GMT
டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகளும்தான் காரணம் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, டெல்லி வன்முறை தொடர்பாக மனு அளித்தனர். 
 
அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, டெல்லி வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத உள்துறை மந்திரியை உடனே பதவி விலக சொல்லும்படி ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், டெல்லி வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகளும்தான் காரணம் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சிகள் தான் காரணம். சிஏஏ போராட்டங்களை தூண்டும் வகையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நடந்து கொள்கின்றனர். கையில் ஆயுதத்துடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது.  

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தாகீர் உசேன் வீடு ஒரு கலகத் தொழிற்சாலை என்பதைக் காட்டும் வீடியோக்கள் உள்ளன. வன்முறைக்குத் தயாராவதற்காக அவரது வீட்டில் துப்பாக்கிகள், ரசாயனங்கள் மற்றும் பிற பொருட்களைப் பார்த்தோம். ஆனால் இந்த இரு கட்சிகளும் இது குறித்து மவுனம் சாதிக்கின்றன. 

நாங்கள் விசாரணையை ஆரம்பித்து டெல்லியில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின் இத்தகைய அரசியலை நாங்கள் கண்டிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News