செய்திகள்
நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசிய காட்சி.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது- டிடிவி தினகரன்

Published On 2019-09-17 04:17 GMT   |   Update On 2019-09-17 04:17 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருபோதும் அதிமுகவுடன் சேராது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
நெய்வேலி:

கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நெய்வேலி அண்ணாதிடலில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் அக்ரி பி.முருகேசன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தென்னாட்டு காந்தி என்று அழைக்கப்பட்டவர் அண்ணா. பெரியாரின் தத்துவங்களை அரசியல் படுத்தி திராவிட கொள்கைகளை தமிழகத்தில் வேரூன்ற செய்தவர் அண்ணா. 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்ன கொள்கைகள், இன்றும் இந்திய துணை கண்டத்துக்கு பொருத்தமாக உள்ளது.

மத்தியில் இதுவரை காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பாரதிய ஜனதா ஆட்சியாக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது புகுத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். இந்தி பேசாத மாநிலங்களில் இருமொழிக்கொள்கையை முதன்முதலில் சட்டமாக்கியவர் அண்ணா. அதனால் தான் தமிழ்நாட்டில் தாய்மொழியை பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கக்கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை. சுதந்திரத்துக்குப்பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் இந்தியை கொண்டு வந்தது. இதனால் காங்கிரசின் ஆட்சியே போய் விட்டது. காமராஜர் போன்ற சிறந்த நிர்வாகிகள் கூட தேர்தலில் தோற்று போய்விட்டார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் வந்தாரை வாழவைக்கக்கூடியவர்கள், ஆனால் விருப்பம் இல்லாமல் எதையும் அவர்கள் மீது திணிக்க முடியாது. இங்குள்ள பா.ஜனதா தலைவர்கள், மத்திய அரசிடம் இதை சொல்ல வேண்டும். தமிழக மக்கள் மீது இந்தியை திணித்தால் மக்கள் வெகுண்டெழுவார்கள்.

எந்த ஒரு பிரிவினையும், பாகுபாடும் இன்றி தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று சேருவார்கள். அரசியல், சாதி, மதத்தை தாண்டி பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடுவார்கள்.

தமிழ்நாட்டில் ஆளும்கட்சி மத்திய அரசின் அடிமையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி மக்களுக்கு தேவையான திட்டங்களை ஓட்டெடுப்பு நடத்தி செயல்படுத்த வேண்டும்.

தற்போது நீட்தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் போன்றவற்றை மக்கள் விரும்பவில்லை. எனவே இவற்றை உடனே கைவிடவேண்டும்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு சிறிய பின்னடைவு ஏற்பட்டது. அதை பயன்படுத்தி சில சுயநலவாதிகள் நம்முடைய கட்சியை விட்டு போய்விட்டார்கள். நம்முடைய கட்சிக்காரர்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

நாங்களே நீக்கணும் என்று நினைத்தோம் அவர்களே போய் விட்டார்கள். இது அம்மாவின் உண்மையான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. உங்களில் ஒருவனாக இருந்து நான் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். தி.மு.க. என்னும் தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரே இயக்கம் அ.ம.மு.க.தான்.

என்னை பார்க்கும் சிலர் நான் தி.மு.க.வுக்கு சென்று விடுவேன் என்று வதந்தியை பரப்புகிறார்கள். அம்மாவால் வழிகாட்டப்பட்ட என் உடம்பில் ஓடுவது தி.மு.க. எதிர்ப்பு ரத்தம். அதனால் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் உள்ள கட்சி அ.ம.மு.க. எதற்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

சசிகலா 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரை ஆளுங்கட்சியினர் யாரும் போய் பார்க்கவில்லை. இந்த ஆட்சி போனதும் பாதிபேர் தி.மு.க.வுக்கும் பா.ஜனதாவுக்கும் ஓடிப்போய்விடுவார்கள்.

சசிகலாவுடன் சில அமைச்சர்கள் பேசிவருவதாக கூறி வருகிறார்கள். இதுபோன்று ஏதாவது பேசி உங்களை குழப்புகிறார்கள். எப்படி எங்களோடு அவர்கள் ஒன்றாக முடியும். அ.தி.மு.க.வுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு போதும் சேராது. வருகிற தேர்தலில் அ.ம.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நெய்வேலி நகர செயலாளர் எம்.ஜெயக்குமார், அம்மா தொழிற்சங்கம் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News