செய்திகள்
பெலாரஸ் போராட்டம்

பெலாரஸ்: அதிபர் பதவி விலகக்கோரி தொடரும் போராட்டம் - சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பு

Published On 2020-09-06 17:21 GMT   |   Update On 2020-09-06 17:21 GMT
பெலாரஸ் நாட்டின் அதிபராக உள்ள லூகாஷென்கோ பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்ஸ்க்:

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் 
நடைபெற்றது. 

அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ (66 வயது) வெற்றிபெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலிலும் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக அதிபராக தேர்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.

மேலும், அலெக்சாண்டர் பதவி விலகவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் போராட்டக்காரர்களின் கோரிக்கையை அதிபர் நிராகரித்தார்.

இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அதிபருக்கு எதிராக கிட்டத்தட்ட 1 மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் மின்ஸ்க் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று திரண்ட ஏராளமான மக்கள் அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக்கக்கோரி கோஷங்களை எழுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்றிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளால் பெலாரசில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

Tags:    

Similar News