செய்திகள்
கோப்புப்படம்

தமிழக மீனவர்கள் பயணம் செய்த மீன்பிடி படகு மீது கப்பல் மோதி விபத்து - 3 பேர் பலி

Published On 2021-04-13 20:46 GMT   |   Update On 2021-04-13 20:46 GMT
மங்களூரு அருகே தமிழக மீனவர்கள் பயணம் செய்த மீன்பிடி படகு மீது நடுக்கடலில் கப்பல் மோதியது. இதில் 3 மீனவர்கள் பலியானார்கள். 6 மீனவர்கள் காணாமல் போனார்கள்.
மங்களூரு:

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பேபோரில் இருந்து 14 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ‘ரபா’ என்ற பெயரிடப்பட்ட மீன்பிடி படகில் அவர்கள் சென்றனர்.

அவர்கள் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

அந்த கப்பல், கர்நாடக மாநிலம் பழைய மங்களூரு துறைமுகத்தில் இருந்து 43 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, நடுக்கடலில் ஒரு கப்பல் அந்த படகு மீது மோதியது. அடுத்த நிமிடம், படகு கவிழ்ந்து, 14 மீனவர்களும் கடலில் விழுந்தனர்.

இதில் 3 மீனவர்கள் உயிரிழந்தனர். 5 மீனவர்கள் நீச்சலடித்து கரை சேர்ந்தனர். 6 மீனவர்கள் கரை திரும்பவில்லை.

இதற்கிடையே, இதுபற்றிய தகவல் அறிந்தவுடன், இந்திய கடலோர காவல் படையினர் தேடுதல் பணியை தொடங்கினர். கப்பல்கள் மற்றும் விமானத்தை பயன்படுத்தி இதில் ஈடுபட்டனர்.

காணாமல் போன 6 மீனவர்களை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

மழை பெய்ததாலும், மோசமான வானிலையாலும் படகு மீது கப்பல் மோதியதாக கூறப்படுகிறது. பலியான மீனவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
Tags:    

Similar News