உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் பங்க்கில் விநியோகித்த தண்ணீர் கலந்த பெட்ரோல் ஆய்வுக்குஅனுப்பி வைப்பு

Published On 2021-12-04 09:11 GMT   |   Update On 2021-12-04 09:11 GMT
அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
திருப்பூர்:

திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.இந்த பெட்ரோல் நிலையத்திற்கு வாகன ஓட்டிகள் சென்று வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பினர். 

பின்னர் வாகனங்களை ஸ்டார்ட் செய்யும்போது பழுது ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பெட்ரோல் நிரப்பிய வாகனங்களில் பழுது ஏற்பட்டதால் பெட்ரோலின் தரம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து வாகனங்களில் நிரப்பிய பெட்ரோலை கேன் களில் பிடித்து பார்த்தனர்.அப்போது பெட்ரோலுடன் தண்ணீர் கலந்திருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது பாதிக்கப்பட்டவர்கள் பெட்ரோலுடன் தண்ணீர் கலந்து வந்ததாகவும், இதனால் வாகனங்கள் பழுதடைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

பழுதான வாகனங்களுக்கு பழுது நீக்குவதற்கான செலவை பெட்ரோல் நிலைய நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடனடியாக பெட்ரோல் விற்பனையை நிறுத்துமாறு போலீசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். 

மேலும் பாதிக்கப்பட்டவர்களும்,பெட்ரோல் நிலைய நிர்வாகமும் தாசில்தார் முன்னிலையில் உரிய பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.இதன் பின்னரே அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய மேலாளர் கூறும்போது, 

பெட்ரோல் டேங்கில் மழைநீர் கசிந்து கலந்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக கூறினார். 

இந்தநிலையில் தண்ணீர் கலந்த பெட்ரோல் ஆய்வுக்காக பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் பெட்ரோலில் மழை தண்ணீர் கலந்ததா? அல்லது பெட்ரோல் பங்க் நிறுவனத்தினரே தண்ணீரை கலந்து விநியோகித்தனரா? என்பது குறித்த விவரம் தெரியவரும். அதன்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News