செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம்- சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல்

Published On 2020-10-11 02:04 GMT   |   Update On 2020-10-11 02:04 GMT
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில், மேற்பார்வைக்குழுவுக்கு உதவும் துணைக்குழுவை கலைக்க தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக்கோரி கேரள மாநிலத்தை சேர்ந்த ஜோஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆர்.எப்.நரிமன், நவீன் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி விசாரித்தது,

அப்போது இந்த மனு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் 4 வாரங்களில் பதில் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு வக்கீல்கள் ஜி.உமாபதி, எம்.யோகேஷ் கண்ணா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட கோரிய இந்த ரிட் மனு தவறாக புரிந்துகொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அணையில் தேக்கி வைக்க வேண்டிய நீரின் அளவு, அணையை திறக்கும் கால அட்டவணை உள்ளிட்டவற்றை மத்திய நீர்வள ஆணையம் இறுதி செய்யவில்லை என ரிட் மனுவில் தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக, கேரள அரசு பிரதிநிதிகளை கொண்ட மேற்பார்வைக்குழு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி செயல்பட்டு வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையை கண்காணிப்பதற்காகவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏற்படுத்தப்பட்ட மேற்பார்வை குழுவுக்கு தகவலை திரட்டி தந்து துணைக்குழு உதவி வருகிறது. முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பாக மனுதாரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானதாக உள்ளன.

முறையான முன்னறிவிப்பு, எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்து விடுவதில்லை. இந்த அணையை சார்ந்துள்ள தமிழகத்தின் 5 வறட்சி மாவட்டங்களின் குடிநீர், நீர்ப்பாசன தேவைக்கேற்ப நீர்வரத்து பராமரிக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை நீரியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், கட்டுமான வகையிலும் வலுவாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இதுவரை நில அதிர்வுகள் ஏற்படவில்லை. இருப்பினும் நில அதிர்வுகளை கண்காணிக்க ரூ.99.95 லட்சம் செலவில் நில அதிர்வு அளவீட்டு கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்பார்வைக்குழுவுக்கு உதவும் துணைக்குழுவை கலைக்க தேவையில்லை. எனவே ஜோஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News