செய்திகள்
இளம்பெண் பலி

பந்தலூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

Published On 2020-01-16 12:55 GMT   |   Update On 2020-01-16 12:55 GMT
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பன்றி காய்ச்சலுக்கு இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் காட்டிக்குன்னு பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் விஜிதா(22). கர்ப்பிணியான இவர், எருமாடு அருகே கொத்தலக்குண்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.

காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இவரை கூடலூரில் உள்ள அக்கார்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த 13-ந்தேதி ஆபரேசன் மூலம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

பிரசவமான சில மணி நேரங்களில் விஜிதா பரிதாபமாக உயிரிழந்தார். ‘அவர், பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் உயிரிழந்தார்,’ என, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நெல்லியாளம் கோட்டைக்குன்னு கிராமத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி தலைமையிலான சுகாதார துறையினரும் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் ‘எருமாடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் கேரளா மாநிலத்திற்கு தினசரி வேலைக்கு சென்று வருவதால், அங்கிருந்து பன்றிக்காய்ச்சல் யாருக்கேனும் பரவி, அதன் மூலம் விஜிதாவும் பாதித்திருக்க கூடும்,’ என, சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கொத்தலகுண்டு கிராமத்தில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் புரூஸ், சுகாதார ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News