செய்திகள்
அமித்ஷா

டெல்லி பாதுகாப்பு நிலவரம் : அமித்ஷா அவசர ஆலோசனை

Published On 2021-01-26 19:29 GMT   |   Update On 2021-01-26 19:29 GMT
டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். கூடுதலாக துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. வன்முறைகள் அரங்கேறின. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர்.

இதனால் தலைநகரில் பதற்றமான சூழல் உருவானது. டெல்லியில் சில இடங்களில் இணையதள சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவை டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து விளக்கினார்கள்.

அதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளை தனது இல்லத்துக்கு அழைத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். டெல்லி பாதுகாப்பு நிலவரத்தை அவர் ஆய்வும் செய்தார்.

இந்த உயர்மட்ட கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் நடந்த மோதல் குறித்தும், வன்செயல்கள் குறித்தும் அமித்ஷாவிடம் அதிகாரிகள் எடுத்துக்கூறினார்கள். இதையடுத்து தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஏற்கனவே 4 ஆயிரத்து 500 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றமான இடங்களில் கூடுதலாக 2 ஆயிரம் துணை ராணுவப்படையினரை குவிக்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், விரைவு அதிரடிப்படையினரும் பணியில் உள்ளனர்.

டெல்லி சம்பவங்களை தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் உஷார்நிலை பிறப்பித்துள்ளார். அதுபோல், அரியானா மாநில போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் யாதவ், அம்மாநிலத்தில் உஷார்நிலையை பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையே, டிராக்டர் பேரணி காரணமாக, டெல்லியில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல், ஏராளமானோர் ரெயிலை தவற விட்டதாக தெரியவந்தது.

அதனால், அத்தகைய பயணிகளுக்கு பயண கட்டணத்தை முழுமையாக திருப்பித்தர வடக்கு ரெயில்வே நிர்வாகம் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக, நேற்று இரவு 9 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியது.

இந்தநிலையில், டிராக்டர் பேரணியில் வெடித்த வன்முறைக்காக வெட்கப்படுவதாகவும், அதற்காக பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் ‘சுவராஜ் இந்தியா’ அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News