ஆன்மிகம்
மாதேஸ்வரன் மலைக்கோவில்

மாதேஸ்வரன் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் தடை

Published On 2020-11-11 06:32 GMT   |   Update On 2020-11-11 06:32 GMT
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஸ்ரீமலை மாதேஸ்வரன் கோவிலுக்கு வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் வருகிற 13-ந் தேதியில் இருந்து 16-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ளது ஸ்ரீமலை மாதேஸ்வரன் சாமி கோவில். இந்த கோவிலுக்கு கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையான 14-ந் தேதி அன்று தமிழகத்தில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில சாம்ராஜ் நகர் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம், கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு வருவார்கள். எனவே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஸ்ரீமலை மாதேஸ்வரன் கோவிலுக்கு வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் வருகிற 13-ந் தேதியில் இருந்து 16-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் வழக்கம்போல கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News