செய்திகள்
தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் அய்யனார் குருக்கள் ஏரி

கடைமடை பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2020-10-31 10:13 GMT   |   Update On 2020-10-31 10:13 GMT
கடைமடை பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருக்காட்டுப்பள்ளி:

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் ஆகிய 3 ஆறுகள் கடந்து செல்கின்றன. இருப்பினும் பூதலூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி முழுவதும் ஏரி பாசன பகுதியாக உள்ளது. இதில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் நீடிப்பு கால்வாய் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதன் மூலம் கிளை வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் சென்று வயல்களில் பாய்ந்து ஒரு போக நெல் சாகுபடி நடைபெறும். குறிப்பாக உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் நவலூர் முதல் கோட்டரப்பட்டி வரை 3,500 ஏக்கர் பாசனம் பெற்று ஒரு போக நெல் சாகுபடி செய்யப்படும்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை ஏரியில் இருந்து தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்துக்கு உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் இந்த பகுதியில் உள்ள பல ஏரிகளுக்கு வருகிறது. இந்த கால்வாய் மூலம் பாசனம் பெறும் கடையகுடி கிராமத்தில் உள்ள அய்யனார் குருக்கள் ஏரிக்கு தண்ணீர் விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் கடைமடை பகுதிகளில் உள்ள சேரம்பாடி, அழகாபேட்டை, மாதுரான் ஆகிய ஏரிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை. கடைமடை பகுதியில் உள்ள எரிகளில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள். எனவே காலதாமதம் செய்யாமல் உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் பாசனம் பெறும் அனைத்து ஏரிகளையும் குறிப்பாக கடைமடை பகுதியில் உள்ள ஏரிகளை நிரப்பி சாகுபடிக்கு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News