ஆன்மிகம்
இயேசு

உபவாச ஜெபத்தை கர்த்தர் கேட்கிறார்

Published On 2020-09-17 07:42 GMT   |   Update On 2020-09-17 07:42 GMT
மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
உபவாசம் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகும். உப என்றால் இணை என்றும், வாசம் என்றால் வாழ்தல் என்றும் பொருள். உபவாசம் என்றால் இணைந்து வாழ்தல் என்று அர்த்தமாகும். நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம் ஆகும். நம்முடைய கவனத்தை கர்த்தரை நோக்கியும், கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கமாகும். உபவாசம் என்பது இந்த தவக்காலத்தில் மட்டும் கடைபிடிக்கப்பட வேண்டியது அல்ல. நாம் எப்போது வேண்டுமானாலும் உபவாசம் இருந்து கடவுளோடு நம் உறவை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏனென்றால் நாம் பல்வேறு விஷேச நாட்களில் பல்வேறு சிறப்பான உணவுகளை உண்பது போல, இந்த தவக்காலத்தில் நாம் மிகவும் உபவாசம் இருந்து தேவனை மகிமைப்படுத்தி, தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த தவக்காலத்தில் இன்னும் அதிகமாக கர்த்தரிடத்தில் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.

எனவே இந்த நாளில் நம்முடைய வாழ்க்கையில் இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மை பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும். அதே போல நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல நற்குணங்களையும் பெற்றுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நம்முடைய தவறுகளுக்காக நம்மை தண்டிக்க நினைக்கும் கர்த்தரின் மனதை மாற்ற மனம் வருந்துதல், மனம் மாறுதல், மன்னிப்பு கேட்டல் ஆகிய இந்த மூன்றும் மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெபத்திற்கு விசுவாசம் தேவை, விசுவாசம் வளர ஜெபம் தேவை, இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. இந்த மூன்று காரியங்களும் ஒன்று சேரும் போது நம்முடைய வாழ்க்கையில் அற்புதம் நிகழ்கிறது.

எனவே இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோம்.

ஜான் பீட்டர், சுவிஷேச ஊழியம், காங்கேயம்
Tags:    

Similar News