குழந்தை பராமரிப்பு
வெளிநாட்டு படிப்பும், சில வழிகாட்டுதல்களும்...

வெளிநாட்டு படிப்பும், சில வழிகாட்டுதல்களும்...

Published On 2022-01-01 03:20 GMT   |   Update On 2022-01-01 03:20 GMT
படிப்பு செலவு குறித்து சிந்திக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்க இருக்கும் பல்கலைக்கழகத்தின் உலக தரவரிசை பட்டியலையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
தென் கொரியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான சேஜாங் பல்கலைக்கழகத்தில், பயோடெக்னாலஜி துறையின் பேராசிரியராக பணியாற்றும் ஆரோக்கிய ராஜ், வெளிநாட்டு கல்வி குறித்தும், அதில் மாணவர்களுக்கு எழும் சந்தேகங்கள் குறித்தும் விளக்கமாக பகிர்ந்து கொள்கிறார்.

எந்தெந்த படிப்புகளுக்கு வெளிநாடு சிறந்த தேர்வாக இருக்கும்?

என்ஜினீயரிங், நேச்சுரல் சயின்ஸ், உயர்தர ஆராய்ச்சிக்கூடங்கள் தேவைப்படும் ஆராய்ச்சி நிலை படிப்புகள்... இவை அனைத்திற்கும் வெளிநாட்டு கல்வி சிறந்ததாக இருக்கும்.

எந்த நாட்டில் என்ன படிக்கலாம் ?

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள், கொரியாவில் அறிவியல் மற்றும் பொறியியல் சம்பந்தமான படிப்புகள் மிக பிரபலம். ஆஸ்திரேலியாவில் மெக்கானிக்கல், சிவில், மைனிங், எனர்ஜி, ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மேலாண்மை படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. கனடாவில் ஐ.டி, கம்ப்யூட்டர் சயின்ஸ், சுற்றுலா, ஓட்டல் மேனேஜ்ெமன்ட், நர்சிங், ஹெல்த்கேர், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், எனர்ஜி என்ஜினீயரிங் படிக்கலாம்.

பிரான்சில் டெலிவிஷன் மீடியா ஆர்ட்ஸ், லாஜிஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் படிக்கலாம். ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எனர்ஜி, மேனேஜ்மென்ட், நர்சிங் படிப்புகளுக்கு அயர்லாந்து உகந்த நாடு. டெலி கம்யூனிகேஷன், புட் அண்ட் டெய்ரி, மேலாண்மைப் படிப்புகளுக்கு நியூசிலாந்து சிறந்த நாடு. சிங்கப்பூர், போலந்து, சுவீடன், நெதர்லாந்து, பின்லாந்து, நார்வே போன்ற நாடுகளிலும் தரமான கல்வி கிடைக்கும்.

வெளிநாட்டில் படிக்க, பிரத்யேக தேர்வுகள் இருக்கிறதா?

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகளுக்குச் செல்ல, ஆங்கிலத் திறனை வெளிப்படுத்தும் டி.ஒ.இ.எப்.எல் TOEFL, ஐ.இ.எல்.டி.எஸ். IELTS ஆகிய தேர்வுகளில் ஒன்றை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். ஆங்கிலம் பேசும் நாடுகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்தத் தேர்வுகளை அங்கீகரிக்கின்றன.

இதுதவிர, இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்காக எஸ்.ஏ.டி SAT என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் இந்தத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கின்றன. முதுநிலை படிக்கச் செல்லும் மாணவர்கள் ஜி.ஆர்.இ தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 110 நாடுகளில் மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் ேசர ஜி.எம்.ஏ.டி GMAT தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

எவ்வளவு செலவாகும்?

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளின் வாழ்க்கை தரம் மிக செலவு நிறைந்தது. அதனால் அங்கு படிக்க அதிக செலவாகலாம். ஆஸ்திரேலியா, கனடா நாடுகளில் செலவு அதிகமாகவும் இருக்காது. குறைவாகவும் இருக்காது. ஆனால் சிங்கப்பூர், சீனா, ஜப்பான், கொரியா, ஹாங்காங் போன்ற நாடுகளில், படிக்க குறைந்த தொகையே செலவாகும்.

படிப்பு செலவு குறித்து சிந்திக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்க இருக்கும் பல்கலைக்கழகத்தின் உலக தரவரிசை பட்டியலையும் கவனத்தில் கொள்ளுங்கள். அமெரிக்காவில் அதிக செலவு செய்து படிப்பதில் தவறில்லை. ஆனால் நீங்கள் சேர்ந்து படிக்கும் அமெரிக்க பல்கலைக்கழகம் உலக தர வரிசைப்பட்டியலில் டாப்-50 இடங்களை பிடிக்கவில்லை என்றால், பெரிய தொகையை செல வழித்து படிப்பதில் எந்த பலனும் இல்லை. அதனால் செலவு குறைந்த நாட்டில் இருக்கும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்து படிப்பது சிறந்தது.

நாடுகளுக்கு ஏற்ப விசா மாறுபடுமா? விசா பெறுவதில் சிக்கல் இருக்குமா?

ஆம்...! நீங்கள் நேரடியாக பல்கலைக்கழகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிப்பதற்கும், ஏஜெண்ட் மூலமாக விண்ணப்பிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. குறிப்பிட்ட பல்கலைக்கழ பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் கல்லூரியில் சேரும்போது, எல்லாவிதமான வசதிகளும், தேவைகளும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். அதாவது, கட்டண உதவி தொகை, வசிப்பிடம், உணவிற்கான செலவு போன்றவற்றோடு விசா விவகாரத்திலும் எச்சரிக்கையாக இருக்க முடியும். ஆனால் தனியார் அமைப்புகளை நம்பி படிக்க செல்லும்போது, எல்லா விஷயத்திலும் ஒன்றுக்கு, 10 முறை நாம் கவனமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு, 10 முறை சோதித்து பார்க்க வேண்டும்.

வெளிநாட்டு படிப்பு, வேலைவாய்ப்பில் இன/ நிறவெறி பாகுபாடுகளை சந்திக்க நேரிடுமா? இத்தகை பிரச்சினைகள் குறைந்த நாடு எது?

பல்கலைக்கழக வளாகங்களில் பெரும்பாலும் இன-மத-நிற வெறி பார்ப்பதில்லை. ஆனால் வெளியிடங்களிலும் அத்தகைய பாதுகாப்பான சூழல் இருக்கும் என உத்திரவாதம் கொடுக்க முடியாது.

வேலை பார்த்துக்கொண்டே படிக்க ஏதுவான நாடு எது? ஏன்?

பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் வேலைபார்த்து கொண்டே படிக்கலாம். ஆனால் அதற்கு அந்தந்த நாட்டு மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும். பெரும்பாலான நாடுகளில் படிப்பு முடிந்ததும் அங்கேயே தங்கி வேலை தேட 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை பி.எஸ்.டபிள்யூ PSW விசா கிடைக்கிறது.

பேராசிரியர் ஆரோக்கிய ராஜ்
Tags:    

Similar News