உள்ளூர் செய்திகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

126-வது பிறந்த நாள்: நேதாஜி சிலைக்கு, நாளை அமைச்சர்கள் மரியாதை

Published On 2022-01-22 07:26 GMT   |   Update On 2022-01-22 08:36 GMT
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்தநாளினை முன்னிட்டு நாளை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் தனித்துவம் மிக்கவரும், ‘வங்கத்துச் சிங்கம்’ என்றும், மக்களால் இன்றும் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 126-வது பிறந்தநாளினை முன்னிட்டு நாளை (23-ந்தேதி) காலை 9.30 மணியளவில், கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக முதன்முறையாக இந்திய தேசிய ராணுவப் படையினை உருவாக்கி, ஆங்கிலேயரை விழிபிதுங்கிட வைத்தவர். இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையினை உலகறியச் செய்தவர். பார்வைக் குறைபாடு காரணத்தால் ராணுவத்தில் இணைந்து பணியாற்றிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பின்னாளில், தானே ஒரு ராணுவத்தையே தலைமையேற்று நடத்தியதும், தான் கொண்டிருந்த தளராத முயற்சிகள் திருவினை யாக்கும் என்பது இன்றைய இளைஞர்களுக்கெல்லாம் உற்சாகமும் ஊக்கமும் தரும் அனுபவப் பாடமாகும்.

சுவாமி விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், அரவிந்தர் ஆகியோர் வரிசையில் மாவீரன் நேதாஜியும் தமிழக மக்களின் மனம் கவர்ந்த வங்க ஆளுமை என்றால் அது மிகையில்லை. தான் தொடங்கிய பார்வர்டு பிளாக் கட்சிக்காக சென்னையிலும், மதுரையிலும் மாவீரன் நேதாஜி ஆற்றிய எழுச்சியுரையின்போது அலைகடலெனத் திரண்ட மக்கள் வெள்ளம், அவரின் ராணுவத்துக்காகத் தமிழ்ப் பெண்கள் தங்களின் நகைகளைக் தானமாகக் கொடுத்தது, அந்த ராணுவத்தில் ‘ஜான்சி ராணி பெண்கள் படைப்பிரிவுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மையார் தலைமையேற்றது’ இவையாவும் தமிழ் மக்கள் கொண்டு இருந்த வற்றாத அன்புக்கு வரலாற்றுச் சாட்சியாகும்.

நம் தாய்த் திருநாட்டின் விடுதலைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை வழியாம் அறவழியில் பயணித்த அருபெருந்தலைவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.

அன்னாரின் அருமை பெருமைகளைப் போற்றிடும் வகையில், அவரின் நூற்றாண்டின் நினைவாக, முத்தமிழறிஞர் கலைஞர் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அன்னாரின் திருவுருவச்சிலையினை 1991-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

மேலும் அவரின் பிறந்த நாளானது (23-ந்தேதி) தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்படுகிறது.



Tags:    

Similar News