செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து களக்காட்டில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்த காட்சி

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின்

Published On 2019-10-10 14:52 GMT   |   Update On 2019-10-10 14:52 GMT
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 3-வது நாளாக இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
களக்காடு:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் மாலை அவர் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட சீவலப்பேரி, பாளையஞ்செட்டிகுளம், அரியகுளம், மேலகுளம் ஆகிய பகுதியில் மக்களை சந்தித்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

2-வது நாளான நேற்று காலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளம், கிருஷ்ணாபுரம், சிவந்திபட்டி பகுதிகளில் கிராமமக்களை சந்தித்து ஆதரவுகேட்டார். மாலையில் ஏர்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, கீழக்கருவேலங்குளம், சடையமான்குளம் விலக்கு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

நன்றி உணர்வுடன் இங்கு வந்துள்ளேன். எம்.பி தேர்தலில் நீங்கள் தந்த வெற்றிக்கு நன்றி. அதுபோல நாங்குநேரி இடைத்தேர்தலில் நீங்கள் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு தர வேண்டும். தற்போது நடப்பது ஆட்சி அல்ல, காட்சி. எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம். திரிசங்கு சொர்க்கம் போல் உள்ளது.

மாதாமாதம் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கொடுத்து ஆட்சியை தக்க வைத்து வருகின்றனர். தமிழகத்தில் நடப்பது எம்.ஜி.ஆர் ஆட்சியும் இல்லை, ஜெயலலிதா ஆட்சியும் இல்லை, பா.ஜ. ஆட்சி ஆகும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்கிறார்கள்.

எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது. இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் தான் உள்ளது. கிடைத்ததை அள்ளிக் கொண்டு சென்று விடலாம் என்று கருதுகின்றனர். அடுத்து தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எல்லா உண்மைகளும் வெளிப்பட்டு விடும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் களக்காடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், தென்காசி-நாகர் கோவிலுக்கு களக்காடு வழியாக புறவழிச்சாலை, குளிர்பதன வசதியுடன் வாழைத்தார் சந்தை அமைக்கப்படும்.

களக்காடு நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். இங்குள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். அதுபோல் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். கருணாநிதி இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார்.

களக்காடு பகுதியில் பச்சையாறு அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்தினார். அவரது ஆட்சியில் தொடங்கிவைத்த தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு திட்டத்தை தற்போது உள்ள அ.தி.மு.க. அரசு சரியாக செயல்படுத்தவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நாங்குநேரி, ராதாபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவோம்.

அ.தி.மு.க. குட்கா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி இருப்பதால், மத்தியஅரசின் கைப்பாவையாக, தலையாட்டும் அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தாலும் தமிழை புறக்கணித்தாலும் தமிழர்களின் நலனுக்கு எதிராக எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை அ.தி.மு.க.வினர் ஏற்றுக்கொள்வதற்கு இதுவே காரணம்.

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் இன்று 3-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். பாளை அருகே உள்ள முன்னீர்பள்ளம், தருவை, செங்குளம் ஆகிய இடங்களில் இன்று காலை திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் இன்று மாலை நாங்குநேரி பேரூர், பரப்பாடி, இட்டமொழி, வடக்கு விஜயநாராயணம், முனைஞ்சிபட்டி, மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மு.க.ஸ்டாலின் 2-வது கட்டமாக நாங்குநேரி தொகுதியில் வருகிற 15 மற்றும் 16 தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

Tags:    

Similar News