லைஃப்ஸ்டைல்
கர்ப்ப காலத்தில் முதல் 90 நாட்களில்...

கர்ப்ப காலத்தில் முதல் 90 நாட்களில்...

Published On 2021-04-28 06:22 GMT   |   Update On 2021-04-28 06:22 GMT
தாய்மையடைந்திருந்தால் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் அதாவது முதல் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை.
கொரோனா பீதியால் மாதக் கணக்கில் குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் புதிய சவால் ஒன்று உலகிற்கு ஏற்பட்டிருக்கிறது. அதாவது தம்பதிகள் அனைவரும் ஒன்றாகவே இருந்ததால், அதிக அளவில் கர்ப்பிணிகள் உருவானார்கள். அதனால் அடுத்தடுத்த மாதங்களில் உலகம் முழுக்க லட்சக்கணக்கில் குழந்தைகள் பிறக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்திருக்கிறது. அந்த அடிப்படையில் இந்தியாவிலும் கர்ப்பிணிகள் அதிகரித்து மக்கள் தொகை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் 90 நாட்களில்..

நீங்கள் ஒருவேளை தாய்மையடைந்திருந்தால் கவனிக்க வேண்டியவிஷயங்கள் சில உண்டு. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் அதாவது முதல் 90 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கரு உருவாகி கர்ப்பப்பையில் நிலைக்கும் காலம் அது. இந்த காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். அதனால் வெளியில் இருந்து நோய்க்கிருமிகள் பாதித்துவிட்டால் உடனடி விளைவுகள் ஏற்படும். அதனால் மிகுந்த கவனம் தேவை. பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்திடவேண்டும். இருமல், சளி போன்றவை தோன்றாமல் பார்த்துக்கொள்வதும் நல்லது.

நோய்க்கிருமிகள் காற்று மற்றும் நீர் மூலமாகவே பெருமளவு பரவும். அதனால் நோய்க்கிருமிகள் எந்த வகையிலும் அணுகாதவாறு உடலை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகி, உடலில் நீர்ச் சத்து குறையாமல் கவனித்துக்கொள்வது அவசியம். முதல் மூன்று மாதங்கள் வளர்ப்பு பிராணிகளிடம் அதிக நெருக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. அவைகளை பராமரிப்பதையும் தவிர்த்திடுவது நல்லது.

கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் கழிப்பிடத்தை சுத்தமாகவைத்து பயன்படுத்துங்கள். பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதை தவிர்த்திடலாம். சிறுநீரை அடக்கிவைப்பதையும் தவிர்க்கவேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருகுவதோடு, அந்தரங்க சுத்தத்தையும் பேணவேண்டும்.

உணவிலும் அதிக கவனம் அவசியம். முடிந்த அளவுக்கு வீட்டில் தயாரிக்கும் உணவுகளையே சாப்பிடுங்கள். வெளி உணவுகளை தவிர்த்திடுங்கள். முதல் மூன்று மாதங்களில் நிறைய பெண்கள் வாந்தி தொந்தரவால் அவதிப்படுவார்கள். அதனால் அவர்கள் கெட்டியான உணவுகளை சாப்பிட விரும்புவதில்லை. சாப்பிட விரும்பினாலும் அதற்கு உடல் ஒத்துழைக்காது. வாந்தியும், இதர நெருக்கடிகளும் இருந்துகொண்டிருந்தாலும் போதுமான அளவில் சாப்பிட்டுதான் ஆகவேண்டும்.

பிடித்தமான, எளிதில் செரிமானமாகும் உணவினை அவ்வப்போது குறைந்த அளவுகளில் சாப்பிட்டு வரலாம். அவை சமச்சீரான சத்துணவாகவும் இருக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் தாயின் உடல் நலத்தோடு, வயிற்றில் இருக்கும் சிசுவின் நலனையும் கருத்தில்கொண்டு அதற்கு ஏற்ற உணவினை உண்ணுவது அவசியம். பழம், காய்கறி, சாலட், சத்து மாவு கஞ்சி போன்றவைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவது நல்லது. வாந்தி எடுத்தாலும் இத்தகைய உணவுகளை சிறிது சிறிதாக சாப்பிட்டுக்கொண்டிருக்கவேண்டும்.

இந்த காலகட்டத்தில் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் முடிந்த அளவு டாக்டரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நல்லது. பொது மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு சென்றால், தாய்மையடைந்திருக்கும் தகவலை மறந்திடாமல் கூறவேண்டும். உடலை வருத்தும் எந்த வேலையையும் செய்யக்கூடாது. சமையல் அறையில் அதிக நேரம் நின்றுகொண்டே வேலைபார்ப்பதை தவிர்த்திடுங்கள்.

அவ்வப்போது உட்கார்ந்தோ, படுத்தோ உடலுக்கு ஓய்வுகொடுக்கவேண்டும். தேவையில்லாமல் பயந்து உடலையோ, மனதையோ வருத்திக்கொள்ளக்கூடாது. குறிப்பாக மனதை பதறவைக்கும் செய்திகளை டெலிவிஷன்களில் பார்க்கக்கூடாது. மனதிற்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடவேண்டும். இசையை கேட்டு மனதை எப்போதும் இயல்பாக வைத்திருப்பதும் அவசியம்.

முதல் மூன்று மாதங்கள் கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்ப்பது நல்லதல்ல. அவ்வப்போது எழுந்து சில நிமிடங்கள் நடந்துவிட்டு மீண்டும் வந்து வேலையை செய்யவேண்டும். மனதிற்கும், உடலுக்கும் சோர்வினை ஏற்படுத்தக்கூடிய எந்த வேலையையும் செய்யவேண்டாம். பயணங்களையும் முடிந்த அளவு தவிர்த்திடலாம். அடிவயிற்றில் வலியோ, ரத்தக் கசிவோ இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையை பெறுங்கள். தாயின் கவனம் எப்போதும் தன் வயிற்றில் வளரும் குழந்தை மீது இருக்கவேண்டும். முதல் மூன்று மாதங்கள் மட்டுமின்றி மொத்த பத்து மாதங்களும் கர்ப்பிணிகள் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.
Tags:    

Similar News