செய்திகள்
டைகர் வுட்ஸ் கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்து கிடக்கும் காட்சி. டைகர் வுட்ஸ்

பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் கார் விபத்தில் படுகாயம்

Published On 2021-02-24 20:20 GMT   |   Update On 2021-02-24 20:20 GMT
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் கார் விபத்தில் சிக்கியதில் படுகாயம் அடைந்தார்.
லாஸ்ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ப் விளையாட்டு வீரரான டைகர் வுட்ஸ் அதிக சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதுடன், நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தையும் அலங்கரித்து இருக்கிறார். அத்துடன் கோல்ப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரராகவும் விளங்கினார்.

45 வயதான டைகர் வுட்ஸ் டெலிவிஷன் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்திய நேரப்படி நேற்று காலை அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சின் புறநகர் பகுதியில் உள்ள செங்குத்தாக இறங்கும் மலைப்பகுதியில் தனது சொகுசு காரை வேகமாக ஓட்டிச்சென்றார். அப்போது கார் திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி பலமுறை உருண்டு கவிழ்ந்தது. இதில் காருக்குள் சிக்கிக் கொண்ட டைகர் வுட்ஸ்க்கு காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். அவரது காரும் பலத்த சேதத்துக்கு உள்ளானது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காரின் கண்ணாடியை உடைத்து டைகர் வுட்சை படுகாயத்துடன் மீட்டனர். அவர் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நீண்ட நேர அறுவை சிகிச்சை முடிந்து தற்போது டைகர் வுட்ஸ் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயங்கரமான விபத்தில் சிக்கியும் டைகர் வுட்ஸ் உயிர்தப்பியது அதிசயம் தான் என்று மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விளையாடும் போது அடிக்கடி காயத்தில் சிக்கும் டைகர் வுட்சுக்கு தற்போது 10-வது முறையாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு அவர் களம் திரும்ப முடியுமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
Tags:    

Similar News