வழிபாடு
மாரியம்மன்

தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2022-03-25 01:30 GMT   |   Update On 2022-03-24 04:15 GMT
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நடக்கிறது.
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்தாண்டு பங்குனி திருவிழா இன்று தொடங்கி அடுத்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவையொட்டி மாரியம்மன் நேற்று (24-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்பாடாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தது.

நேற்று இரவு தங்கி இன்று(25-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்பட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள கோவிலை சென்றடைவார். அதை தொடர்ந்து இன்று இரவு 11 மணிக்கு பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும்.

விழாவில் 4-ம் நாள் 28-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெறும். 29-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பங்குனி விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது.

அதை தொடர்ந்து 2-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 3-ந் தேதி இரவு 7.15 மணிக்கு தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News