உள்ளூர் செய்திகள்
திமுக

தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

Published On 2021-12-30 07:19 GMT   |   Update On 2021-12-30 07:19 GMT
கொளத்தூர் தொகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக மாவட்ட செயலாளர் சேகர்பாபு கூறினார்.
சென்னை:

தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று சென்னை அறிவாலயத்தில் கடந்த 18-ந்தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

அந்த அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான படிவங்கள் அச்சிடப்பட்டு கட்சி நிர்வாகிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதில் புதிதாக சேருபவரின் பெயர், முகவரி, விவரம், ரே‌ஷன் கார்டு, ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றையும் இணைத்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி இருந்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதிக்கு சென்று உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். வீடு வீடாக நடந்து சென்று படிவங்களை வழங்கி கட்சி உறுப்பினராக சேருமாறு கேட்டுக் கொண் டார்.

முதல்-அமைச்சர் நேரடியாக வந்து கட்சியில் சேருமாறு அழைப்பு விடுப்பதை அறிந்து ஏராளமான பொதுமக்கள் தி.மு.க.வில் உறுப்பினராக ஆர்வம் காட்டினர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் சேகர்பாபு கூறுகையில், ‘கொளத்தூர் தொகுதியில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பேர் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்று தெரிவித்தார். இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News