அழகுக் குறிப்புகள்
குர்தாக்கள்

தென் இந்திய ஆண்களின் விருப்பமான ஆடை

Published On 2022-04-20 06:20 GMT   |   Update On 2022-04-20 06:20 GMT
சில குர்தாக்கள் எளிமையாகவும், சில குர்தாக்கள் பிளெயின் அல்லது பிரிண்டட் செய்யப்பட்டும், இன்னும் சில குர்தாக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டு மிகவும் அழகாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
தென் இந்திய ஆண்களின் விருப்பமான ஆடைகளில் ஒன்றாக இவை மாறிவிட்டன. காட்டன், சில்க்-காட்டன், தூய பட்டு மற்றும் டஸ்ஸர் பட்டில் குர்தாக்களானது வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சில குர்தாக்கள் எளிமையாகவும், சில குர்தாக்கள் பிளெயின் அல்லது பிரிண்டட் செய்யப்பட்டும், இன்னும் சில குர்தாக்கள் எம்பிராய்டரி செய்யப்பட்டு மிகவும் அழகாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

காட்டன் குர்தாக்கள்

இவை அணிந்து கொள்ள லேசாக, வசதியாக இருப்பதோடு செமி ஃபார்மல் உடையாக அணிந்து கொள்வது போலும் வருகின்றது. இவற்றை அன்றாடம் வீட்டில் அணியும் உடையாகவும் வைத்துக்கொள்ளலாம். பலவித வண்ணங்களில் பிளெயினாகவும், கழுத்து மற்றும் பட்டன் துளைகளைச் சுற்றி எம்பிராய்டரி செய்யப்பட்டு நேர்த்தியான வடிவமைப்புடன் வருகின்றது.

இந்தியப் பருவநிலைக்கு ஏற்றவையாக இவ்வகைக் காட்டன் குர்தாக்கள் உள்ளன.

சில்க்-காட்டன் குர்தாக்கள்

இவ்வகைக் குர்தாக்கள் காட்டன் குர்தாக்களைவிட சற்று கனமானதாகவும், பளபளப்பாகவும், விரிவான எம்ராய்டரி வேலைப்பாடுகளுடன் பணக்காரத் தோற்றத்தை தருபவையாக உள்ளன.

இவை ஃபார்மல் விருந்துகள் மற்றும் சமூக விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக உள்ளன. கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்ட சாந்தா வடிவங்களைக் கொண்ட சில்க்-காட்டன் குர்தாக்கள் ஒரு சிறப்பான வகையாக உள்ளன.

மேற்கு வங்காளத்தில் உள்ள போல்பூரைச் சேர்ந்த கிராமப்புற கைவினைஞர்களால் இவ்வகை காந்தா வேலைபாடுகள் செய்யப்படுகின்றன.

ஜமீன்தார் பாணியிலான குர்தாக்கள் மற்றொரு சிறப்பான வகையைச் சேர்ந்தவை. இவற்றில் முன்புறம் பட்டன்களுக்குப் (பொத்தான்களுக்கு) பதிலாக உடலின் பக்கவாட்டில் திறப்பைக் கொண்டுள்ளன. கயிறுகளால் அவற்றை இறுக்கிக் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு பட்டன்கள் இல்லாமல் கயிறுகளால் கட்டுவது பிரமாண்டமான, ஜமீன்தார் வகை தோற்றத்தைக் கொடுக்கின்றன.

தூயபட்டு குர்தாக்கள்

இவை மென்மையான, மல்பெரி பட்டினால் தயாரிக்கப்படுவதால் அணிந்துகொள்ள இலகுவாகவும், வசதியாகவும் உள்ளன. இவை பிரகாசமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் கிடைக்கின்றன. சிக்கலான எம்பிராய்டரி வடிவங்கள் இந்த பட்டு குர்தாக்களின் அழகை உயர்த்திக் காட்டுகின்றன. திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு அணியப் பொருத்தமானவையாக இவை உள்ளன.

டஸ்ஸர் பட்டு குர்தாக்கள்

இவை பழுப்பு, கிரீம், தேன் மற்றும் தங்க நிறங்களில் அழகாக உள்ளன. இவ்வகை குர்தாக்களின் துணியானது காகிதம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. வழக்கமாக எம்பிராய்டரி வடிவங்களால் இவ்வகைக் குர்தாக்கள் அலங்கரிப் படுகின்றன. கழுத்தைச் சுற்றி மிகவும் லேசான எம்பிராய்டரி வடிவங்களும், குர்தாவின் முன்பக்கம் முழுவதையும் கனமான எம்பிராய்டரி அலங்கரிப்பது போலவும் வடிவமைக்கிறார்கள். இந்த குர்தாக்கள் பூஜைகள் மற்றும் திருமணங்கள் போன்ற விழாக்களுக்கு அணியப் பொருத்தமானவையாக உள்ளன.

டஸ்ஸர் பட்டு குர்தா மற்றும் டோத்தி என்பது பெங்காலி திருமணத்தில் மணமகனின் வழக்கமான உடையாகும்.

பாரம்பரியமாக, பைஜாமாக்கள் அல்லது டோத்திகளுக்கு மேல் குர்தாக்களை அணிந்து வந்திருக்கிறார்கள். சமீபகாலமாக கால்சட்டைகள் அல்லது ஜீன்ஸ்களுக்கு மேலும் குர்தாக்களை அணிவதை நடுத்தர ஆண்கள் விரும்புகிறார்கள்.

ஸ்டைலிஷ் குர்தாக்கள்

* ஏ சிமெட்ரிக் குர்தாக்கள்:- இவை சமச்சீரற்ற தோற்றத்தைத் தருபவை. கழுத்தின் பக்கவாட்டில் இரண்டு பொத்தான்கள் (பட்டன்கள்) வைக்கப்பட்டு இரண்டு அடர்த்தியான கலர்கள் சேர்ந்து வருவதுபோல் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவை நவீன பாணியில் கண்கவரும் விதத்தில் இளைஞர்களின் விருப்ப ஆடைகளில் ஒன்றாக உள்ளன.

* மாண்டரின் குர்தாக்கள்:- உயரமான மற்றும் மெலிதான ஆண்களுக்கு ஏற்ற நேர்த்தியான குர்தாக்கள் இவை. முன்புறம் பட்டன்கள் வைத்து காலருடன் வந்திருக்கும் இவை மாண்டரின் குர்தாவிற்கு சிறப்பு சேர்க்கின்றன.

சைடு-ஸ்லிட் குர்தாக்கள்:- குர்தாவின் முன்புற பக்கவாட்டில் ஒரு புறம் ஸ்லிட்டும் மறுபுறம் பாக்கெட்டானது வைக்கப்பட்டு அதற்கு வெள்ளை அல்லது மென்மையான வண்ண லைனிங் கொடுத்திருப்பது கண்களை கவர்ந்து இழுக்கின்றது.

ப்ரோகேட் குர்தாக்கள்:- ப்ரோகேட் வேலைபாடுகளானது குர்தா முழுவதுமிருக்க பிளெயின் நிறத்தில் முழுக்கை அதன் பார்டர் உடல் டிசைனில் சிவப்பு, நீலம், தங்க நிறம் மற்றும் பழுப்பு நிறங்களில் அட்டகாசமாக உள்ளது.

பேக் எம்பிராய்டரி குர்தாக்கள்:- முதுகுப்புறம் காலர் மற்றும் கை பார்டர்களில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும் இவ்வகைக் குர்தாக்கள் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் சேர்த்து வரும்பொழுது அவை நிச்சயம் ஸ்டைலான தோற்றத்தை தரும். கலாச்சார மற்றும் சமூக விழாக்களுக்கு பாட்டியாலா பேன்ட்டுகளுக்கு மேலும், நவீன விருந்துகளுக்கு ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு மேலும் அணியலாம்.

இவை மட்டுமல்லாமல் ஓப்பன் காலர் குர்தாக்கள், பட்டன் ஸ்லீவ் குர்தாக்கள், சைனீஸ் காலர் குர்தா, கெளல் ட்ரேப்டு குர்தா, மஃப்ளர் ஸ்டைல் குர்தா, குர்தா ஜாக்கெட் டிசைன், பிளெயிட் குர்தா, கான்க்ரீட் டிசைன் குர்தா, குஜராத்தி ஸ்டைல் குர்தா, பதானி குர்தா எனப்பல வகைகள் குர்தாக்களில் உள்ளன.
Tags:    

Similar News