செய்திகள்
கோப்புபடம்

பிளக்ஸ் பேனர் விவகாரம் காங்கயத்தில் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் மோதல்

Published On 2021-04-06 13:30 GMT   |   Update On 2021-04-06 13:30 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு மணியாத்தாபாளையம் வாக்குச்சாவடி பகுதியில் இன்று காலை தி.மு.க.வினர் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்ற பிளக்ஸ் பேனரை வைத்ததாக கூறப்படுகிறது.

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூத்தாம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு தேர்தல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சோதனை செய்தனர்.

இதற்காக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது அதிகாரிகள் 50 முறை பட்டனை அழுத்தி உரிய முறையில் வாக்குகள் பதிவாகிறதா? என ஆய்வு செய்தனர். இந்தநிலையில் அங்கு வந்த தி.மு.க இளைஞரணி பிரமுகர் ஒருவர், தேர்தல் அலுவலர்களிடம் நீங்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்தது சரியில்லை, மீண்டும் பட்டனை அழுத்தி சோதனை செய்யுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு வந்து சமரசம் செய்து வைத்தனர்.

இதனிடையே திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு மணியாத்தாபாளையம் வாக்குச்சாவடி பகுதியில் இன்று காலை தி.மு.க.வினர் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்ற பிளக்ஸ் பேனரை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க நிர்வாகிகள் அங்கு வந்து தேர்தல் அதிகாரியிடம் பிளக்ஸ் பேனரை அகற்றும் படி முறையிட்டனர். மேலும் தி.மு.க.வினரை கண்டித்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பிளக்ஸ் பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது.

Tags:    

Similar News