லைஃப்ஸ்டைல்

முதியோரை மதிப்போம்...

Published On 2019-06-19 01:58 GMT   |   Update On 2019-06-19 01:58 GMT
கடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது. முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள்.
கடவுளுக்கு இணையாக முதியோரைக் கருதிய காலம் ஒன்று இருந்தது. இப்போது காலம் மிகவும் மாறிப் போய்விட்டது. நமது கலாசாரத்துடன் பொருந்திப் போகிறதோ, இல்லையோ கூடுமானவரை மேலை நாட்டை பின்பற்ற நாம் முயன்று கொண்டிருக்கிறோம்.

முதியோரை மதிக்கும் பண்பாடு என்பது பெரிதும் குறைந்துவிட்டது. கடவுளாகக் கருதப்பட்ட அவர்கள் சுமையாகவோ செலவாகவோ கருதப்படுகிறார்கள். இந்த பிரச்சினையை நாம் ஆழ்ந்து நோக்கினால் முதியோரின் நிலைமை என்பது இன்று மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது, அவர்கள் வேண்டப்படாதவர்களாகவும், ஆறாவது விரலாகவுமே இருக்கிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களை பெருமளவில் பாதிக்கிறது. தாம் இருப்பதே தேவையற்ற ஒன்று என்று கருதத் தொடங்குகிறார்கள்.

இந்த உணர்வு அவர்களின் உடல் உபாதைகளுடன் இணைந்துகொண்டு அவர்களுக்கான வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் இவ்வாறான பல்வேறு சோகக்கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

முதியோர் அவமதிப்பு என்பது வயதானவர்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடானவையாகும். இது குறித்து யாரும் கலந்துரையாட எண்ணுவதில்லை. மரபு சார்ந்து முதியோர் என்பவர் குடும்பத்திலும், சமூகத்திலும் மதிப்பிற்குரியவர்கள் ஆவார்கள். அவர்கள் அவமதிக்கப்படுவதை யாரும் சிந்திப்பதில்லை.அவர்கள் பல்வேறு விதத்தில் அவமதிப்பை சந்திக்கின்றனர்

வயதானவர்களை பாரமாக கருதும் அவர்களின் உறவினர்கள் முதியோர்களை அடித்தல் ,கிள்ளுதல், கை, கால்களை முறுக்கி துன்புறுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர்,மேலும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் பேச விடாமல் தடுப்பது, பேரக்குழந்தைகளை அவர்களிடம் விளையாட விடாமல் தடுப்பது, ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் கூட அவர்களிடம் யாரும் பேசாமல் இருப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் முதியோர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

முதியோரின் வருமானம் அல்லது நிதி ஆதாரத்தைத் தமது சொந்தக் காரியங்களுக்காக, கவனித்துக் கொள்பவர் அல்லது ஆலோசகர் முதியோரிடம் தவறான முறையில் உயில் எழுதும்படி வற்புறுத்துவதும் அவர்களை உதாசீனப்படுத்துவதும் முதியவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பது அல்லது வேண்டும் என்றே தவிர்ப்பது போன்றவை முதியோரை மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கி விடுகிறது.

முதுமையில் எந்தவிதமான வருமானமோ சொத்தோ இல்லாமல் இளைஞர்களைச் சார்ந்து வசிப்பவர்கள், ஒரே குழந்தையை பெற்ற முதியவர்கள், நாள்பட்ட நோய் உள்ள முதியவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கும் முதியவர்கள், தங்களுடைய எல்லா தேவைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களின் உதவியை நாடும் போது முதியவர்களிடம் வெறுப்பும், கோபமும் ஏற்படுகிறது.

சரியில்லாத குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்து வரும் குழந்தை, பெரியவனாகும் போது தன் கோபத்தை முதியவர்களிடம் காண்பிக்கிறான். வீட்டில் தொடர்ந்து முதியவர் நோய்வாய்ப்பட்டு கிடக்கும் போது இடவசதி மற்றும் நிதி வசதி குறைவினால் முதியவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். முதியவர்களை தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் போது அவர்களை கவனித்து கொள்ளும் உறவினர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இதனால் நிதி வசதியும் குறையும். சில சமயங்களில் செய்யும் தொழிலில் இழப்பும் ஏற்படும். இவர்கள் மது அல்லது மருந்துக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள்.

மேற்கொண்ட பலவித காரணங்களால் பாதிக்கப்படும் உறவினர்கள், முதியவர்களை அவமதிக்க தொடங்குகின்றனர்.சமூகத்தில் மதிப்பிழந்த பெரியவர்கள் மற்றும் நிதி வசதியில்லாத முதியவர்கள் வீட்டில் இளைஞர்களால் அவமதிக்கப்படுகிறார்கள்.ஹெல்பேஜ் இந்தியா’ எனும் தொண்டு நிறுவனம் 2014-ல் நடத்திய கணக்கெடுப்பில் சுமார் 32சதவீத முதியவர்கள் இளைய சமுதாயத்தினரால் அவமதிக்கப்படுகிறார்கள் அல்லது தக்க மரியாதை இல்லாமல் நடத்தப்படுகிறார்கள். இதைவிட இன்னமும் அதிர்ச்சி யூட்டும் செய்தி, 56 சதவீத முதியவர்கள் தனது மகன்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள் மற்றும் 23 சதவீத முதியவர்கள் தனது மருமகள்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.



இளைஞர்கள் அவர்களாகவே முதியோர்களை புறக்கணித்தலை உணராதபட்சத்தில், சமூகம் அதை உணர வைக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளில் முதியவர்களின் பெருமைகளைப் பற்றியும், அவர்களின் தேவையைப் பற்றியும் சொல்லித் தர வேண்டும். தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களில் பெற்றோர்கள், முதியோர்களின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஒலி-ஒளி பரப்பப்பட வேண்டும். பத்திரிகைகள் வாயிலாகவும் இது பரவலாக்கப்பட வேண்டும். முதியவர்களை மதித்து நடக்கும் இளைஞர்களைப் பாராட்டி விழா எடுத்து பரிசுகளை வழங்கலாம். இது மற்ற இளைஞர்கள் மனதிலும் மாற்றத்தை விளைவிக்கும்.ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15- ம் தேதியை “முதியோருக்கு எதிரான கொடுமைகள் ஓழிய விழிப்புணர்ச்சி எட்டும் நாளாக‘ அனுசரித்து வருகிறது. அன்று எல்லா இளைஞர்களும், குடும்பத்தினரும் கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

“முதியோருக்கு எதிராக இழைக்கப்படும் அனைத்து வகை கொடுமைகளையும் இவை வாய்மொழியாகவோ, வன்முறை மூலமாகவோ, பொருளாதார ரீதியாகவோ எந்த உருவில் வந்தாலும் அவற்றை களைவதற்காக முளையிலேயே கண்டுபிடித்துத் தலையிட்டுத் தடுக்கவும், அறவே நீக்கவும், என் சொந்த முயற்சியாலும், தேவைப்பட்டால் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடும் பாடுபடுவேன்.

மேலும், அவர்களுடைய அனைத்து வகையான தேவைகளுக்கும் அதாவது உடல் வளத்துக்கும், பாதுகாப்புக்கும், அன்பு மற்றும் மனவளத்துக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும், அங்கீகாரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அவற்றைத் தடுத்து பாதுகாப்பேன் என்றும் உறுதி ஏற்கிறேன்”.இயலாமையைப் பொறுத்தல் ஓர் உயர்ந்த குணம் ஓசையின்றி முதியோருக்கு இழைக்கும் கொடுமை தண்டனைக்குரிய வன்முறை. முதியோருக்கு எதிரான கொடுமை ஒரு மனிதாபிமானமற்ற செயல்.முதுமையில் இயலாமை இயற்கையின் நியதி, முதியோருக்குக் கொடுமை செய்வோர் இயற்கையின் எதிரியாவர். இது ஓரு வீட்டுப்பிரச்சினையாக யாரும் எண்ணிவிடக்கூடாது. இதுவே விரைவில் ஓரு சமுதாயப் பிரச்சினையாக உருவெடுத்தாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. முதியோர்களை மதிப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வோம். அவர்கள் நிம்மதியாக, கவுரவமாக வாழ எல்லோரும் துணை இருப்போம்.

டாக்டர் வி.எஸ்.நடராஜன்,

முன்னாள் தலைவர், முதியோர்நலப்பிரிவு, ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை, சென்னை.
Tags:    

Similar News