செய்திகள்
அமித்ஷா, ஜேபி நட்டாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மத்திய மந்திரி சபையில் மாற்றம் வருமா? - அமித்ஷா, நட்டாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Published On 2021-06-11 23:30 GMT   |   Update On 2021-06-11 23:30 GMT
டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் உள்துறை மந்திரி, பாஜக தேசிய தலைவர், பாஜக கூட்டணி தலைவர்கள் உள்பட பலரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றபின் மத்திய மந்திரி சபையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஆனால் தனது மந்திரி சபையை மாற்றியமைக்க பிரதமர் மோடி விரும்புவதாகவும், இந்த மாற்றம் விரைவில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதேபோல, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் உத்தர பிரதேசத்திலும் யோகி ஆதித்யநாத் மந்திரி சபையை மாற்றியமைக்க பா.ஜ.க. மேலிடம் விரும்புவதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாநில பா.ஜ.க. தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது இல்லத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதுவும் வெளியாகவில்லை.



முன்னதாக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கூட்டணி கட்சித்தலைவர்களை அமித்ஷா சந்தித்துப் பேசினார். இதில் முக்கியமாக, அப்னாதளம் தலைவர் அனுபிரியா படேலையும் அவர் சந்தித்தார்.

இது ஒருபுறம் இருக்க, பிரதமர் மோடி தனது மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள பல்வேறு மந்திரிகள் குழுக்களை சந்தித்தார். குறிப்பாக துறை மந்திரிகள், இணை மந்திரிகள் என மந்திரிகள் குழுக்களை சந்தித்துப் பேசினார். இந்த கூட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அந்தந்த துறை மந்திரிகள் மேற்கொண்ட பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்றார்.

மேலும், பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News