செய்திகள்
கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்த காட்சி.

பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு-அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அதிரடி உத்தரவு

Published On 2021-06-18 08:35 GMT   |   Update On 2021-06-18 08:35 GMT
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகரில் ஆய்வு மேற்கொண்டார். 8, 9, 10 ஆகிய வார்டுகளில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளும் களப்பணியாளர்களை சந்தித்து அவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு புதிய வழிமுறைகளை செயல்படுத்த ஏற்பாடு செய்து வருகிறோம். பொதுமக்களுக்கு எங்கு தடுப்பூசி போடப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார். பின்னர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கமிஷனர் கிராந்தி குமார் பாடி பேசும்போது, பொதுமக்களிடமிருந்து மின்னஞ்சல், மனுக்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் போன்ற பிரிவுகளின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாநகர பொறியாளர் ரவி, செயற்பொறியாளர்கள் திருமுருகன், முகமது சபியுல்லா, மாநகர நல அதிகாரி பிரதீப், வாசுதேவன் ,கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News