செய்திகள்
சிஏ தேர்வு

சி.ஏ. தேர்வுகள் நவம்பர் மாதத்தில் திட்டமிட்டபடி நடைபெறும் - ஐசிஏஐ விளக்கம்

Published On 2020-10-30 19:43 GMT   |   Update On 2020-10-30 19:57 GMT
சி.ஏ. தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை. அவை நவம்பர் மாதத்தில் திட்டமிட்டபடி நடக்கும் என இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (ஐசிஏஐ) விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி:

சி.ஏ. சேர்வதற்கு இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதில் பவுண்டேசன் கோர்ஸ் என்பதில் பிளஸ் டூ முடித்தவர்கள் எழுதலாம் என இருந்தது தற்போது 10-ம் வகுப்பு படித்தவர்களும் எழுதலாம் என கூறப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே ஆடிட்டர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் (இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா) அறிவித்துள்ளது. புதிய நடைமுறையை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக பட்டய கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது.

சி.ஏ. எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி என்ற நடைமுறை மாற்றப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு (சி.ஏ.) ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டுக்கான தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. பிறகு பீகார் தேர்தல் காரணமாக மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது சி.ஏ. தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு ஜனவரி வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு மறுத்துள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சி.ஏ. தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை என இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு (ஐசிஏஐ) விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பான விளக்கத்தை டுவிட்டர் பக்கத்தில் ஐசிஏஐ பதிவிட்டுள்ளது. அதில், சி.ஏ. படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. ஒரே ஷிஃப்ட்டில் மதியம் 2 மணிக்குத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News