லைஃப்ஸ்டைல்
வாயுனிஷ்காசனம்

நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்

Published On 2020-08-07 03:10 GMT   |   Update On 2020-08-07 03:10 GMT
இந்த ஆசனம் செய்யும் போது நரம்பு மண்டலம் முழுவதும் தூண்டப்படுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கிறது. நரம்பு சுருட்டல்(வெரிகோஸ் வெய்ன்) நோய் தடுக்கப்படுகிறது.
ஒருவரிடம் சோம்பல் எனும் சோம்பேறித்தனம் இருந்து விட்டால் அது வளர்ச்சியை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் கெடுத்து அழிவில் கொண்டு விட்டுவிடும். இதில் இருந்து மீளவும் ஆரோக்கியம் மேம்படவும் இப்போது ஒரு ஆசனம் பழகுவோம். அதன் பெயர் வாயுனிஷ்காசனம்.

செய்முறை

சமதளமான இடத்தில் தரை விரிப்பில் கிழக்கு நோக்கி பாதங்கள் இரண்டு அடி இடைவெளியில் காலை அகட்டி குந்திய நிலையில் இருக்கவும். பாதங்களின் உட்பகுதியை கைவிரல்களால் பிடித்து கொள்ளவும்.

கை விரல்கள் பாதங்களுக்கு- அடியிலும், கட்டை விரல் பாதங்களின் மேற்புறமும் இருக்கும் படி பற்றி பிடிக்கவும். கைகள் முழங்கால்களை அழுத்திய நிலையில் முழுங்கைகள் சற்று மடிந்து இருக்கட்டும்.

மூச்சை இழுத்தவாறு தலையை மேல் நோக்கி சாய்க்கவும். சில நொடிகள் மூச்சை நிறுத்தவும். பிறகு மூச்சை வெளியேற்றியவாறு முழங்கால்களை நேராக்கி நிமிரவும்.

இடுப்பு பகுதியை மேலே உயர்த்தி முழங்கால்களை பார்த்தவாறு தலையை தாழ்த்தி குனியவும். வெளியேற்றிய மூச்சை மூன்று நொடிகள் அப்படியே நிறுத்தவும். பின்னர் மூச்சை இழுத்தவாறு தொடக்க நிலைக்கு வரவும்.

பயன்கள்

மிக முக்கியமாக இடுப்பு நரம்பின் செயல்பாடு தூண்டப்படும்.

நரம்பு மண்டலம் முழுவதும் தூண்டப்படுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிக்கிறது. தோள் மூட்டுகள், முழங்கால்கள், கழுத்து புஜங்களில் இருக்கக்கூடிய நரம்புகளின் செயல்திறன் மேம்படுகிறது.  கழுத்தின் பின்புறம் தோள் மூட்டுகளிடன் அருகில் உள்ள தசைகள் தளர்த்தப்டுகிறது.

இடுப்புவலி, மூட்டுவலி தடுக்கப்படுகிறது.

முதுகுத்தண்டு, புஜங்கள், தொடைப்பகுதியில் விரைப்புத்தன்மை குறைகிறது.

வயிற்று தசைகள் துண்டப்பட்டு மலச்சிக்கல் தீருகிறது.

நினைவாற்றம் அதிகரிக்கிறது. நரம்பு சுருட்டல்(வெரிகோஸ் வெய்ன்) நோய் தடுக்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்

ரத்த அழுத்தம், முதுகு வலி, முழங்கால் வலி, தலைவலி உள்ளவர்கள் யோகா மாஸ்டரிடம் ஆலோசனையை பெற்று செய்யவும்.

யோகி சிவானந்தம்(கென்னடி)
Tags:    

Similar News