செய்திகள்
நாராயணசாமி

புதுவை சட்டசபை கட்டிடம் சேதம்- நாராயணசாமி நேரில் பார்வையிட்டார்

Published On 2020-11-08 07:54 GMT   |   Update On 2020-11-08 07:54 GMT
இடி தாக்கியதில் புதுவை சட்டசபை கட்டிடம் சேதம் அடைந்தது. இதனை முதல்- அமைச்சர் நாராயணசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
புதுச்சேரி:

புதுவை கடற்கரை சாலை பாரதி பூங்கா அருகில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் புதுவை சட்டமன்றம் இயங்கி வருகிறது. 

சட்டமன்றத்தின் மைய மண்டபம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கட்டிடமாகும். அதனை சுற்றி புதிதாக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மைய மண்டபம் செயல்படும் கட்டிடத்திற்கு பின்புறம் கடந்த 2006-ம் ஆண்டு 3 தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் சட்டமன்றத்திற்கு பின்புறம் நுழைவு வாயிலும், முதல் தளத்தில் சட்டமன்ற செயலர் அலுவலகமும், 2-வது தளத்தில் அமைச்சரவை அலுவலகமும், 3 -வது தளத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் அலுவலகமும் கருத்தரங்க அறையும் உள்ளது. அதன் மேல் உள்ள மாடியில் குடிநீர் தொட்டிகள் பில்லர் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக புதுவையில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 
அதன்படி நேற்று முன் தினமும் இரவு மழை பெய்தது. அப்போது கடுமையாக இடி சத்தம் கேட்டது. இதில், சட்டமன்ற மைய மண்டபம் பின்புறம் உள்ள கட்டிடத்தின் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இடி தாக்கியது. இதனால் அந்த சுவர் சேதமடைந்து சரிந்து விழுந்தது. இதில், தரைத்தளத்தில் சபாநாயகர் அலுவலகம் மற்றும் சட்டமன்ற செயலர் பயன்படுத்தும் அலுவலக கார்கள் மீது இடிந்த சுவரின் சில பகுதிகள் விழுந்தது. 

இதனால் அங்கிருந்த 2 கார்கள் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து சட்டமன்ற செயலர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அதிர்ஷ்டவசமாக மைய மண்டபம் இயங்கும் பழமையான கட்டிடத்தின் மீது இடி தாக்கவில்லை. அப்படி தாக்கியிருந்தால் அந்த கட்டிடமே முழுமையாக சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளது.  இரவு நேரத்தில் இடி தாக்கியதால் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Tags:    

Similar News