செய்திகள்
அதிதி சிங்

உங்களுக்கு என்னதான் வேண்டும்? -பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ கேள்வி

Published On 2021-11-20 11:54 GMT   |   Update On 2021-11-20 11:54 GMT
பிரியங்கா காந்தி விசாரணை அமைப்புகளை நம்பவில்லை என்றால், யாரை நம்புகிறார் என்று தெரியவில்லை என காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங் கூறினார்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங், கட்சி தலைமை குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன்வைக்கிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் செயல்பாடு குறித்து அதிதி சிங் கூறியதாவது:-

லக்கிம்பூர் வன்முறை மற்றும் பிற பிரச்சினைகளைப் பொருத்தவரை, பிரியங்கா காந்தி எப்போதும் அதை அரசியலாக்கினார். லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றம் அதை கவனத்தில் கொண்டுள்ளது. பிரியங்கா காந்தி விசாரணை அமைப்புகளை நம்பவில்லை என்றால், யாரை நம்புகிறார் என்று தெரியவில்லை.

மசோதாக்கள் கொண்டு வரப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு பிரச்சினையாக இருந்தது. சட்டங்கள் (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்யப்பட்டபோதும் பிரச்சினையாக இருக்கிறது. அவருக்கு என்னதான் வேண்டும்? அவர் தெளிவாக சொல்ல வேண்டும். அவர் இந்த விஷயத்தை மட்டுமே அரசியலாக்குகிறார். இப்போது அரசியல் செய்ய வேண்டிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர்  கூறினார்.

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்த நிலையில், அடுத்த பிரச்சனையை கையில் எடுத்தார் பிரியங்கா காந்தி. விவசாயிகள் மீது பிரதமருக்கு உண்மையில் அக்கறை இருந்தால், லக்கிம்பூர் கேரி வழக்கில் உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், டிஜிபிக்கள் மாநாட்டில் அவருடன் மேடையைப் பகிரக் கூடாது என பிரியங்கா கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News