செய்திகள்
மளிகை மற்றும் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் திரண்டு வந்ததை படத்தில் காணலாம்.

மளிகை-காய்கறி கடைகளில் காலையிலேயே பொதுமக்கள் குவிந்தனர்

Published On 2021-06-07 09:44 GMT   |   Update On 2021-06-07 09:44 GMT
திருப்பூர் மாவட்டத்தில் மளிகை-காய்கறிகள் கடைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. 15 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் காலையிலேயே கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
திருப்பூர்:

கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் இன்று முதல் சில தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இதையொட்டி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  தனியாக செயல்படுகின்ற மளிகை, காய்கறி, இறைச்சி  மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இன்று காலை  6மணி முதல்  திறக்கப்பட்டு இயங்கின. இதேப்போல் பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகளும் காலை 6மணி முதல் செயல்பட்டன. இந்த கடைகள் மாலை 5மணி வரை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் தென்னம்பாளையம் மீன்மார்க்கெட்டில் மொத்த வியாபார மீன்கடைகள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் சிக்கன், மட்டன் ஸ்டால்களும் மொத்த வியாபார கடைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் 30 சதவீத பணியாளர்கள் மட்டும் பணிக்கு வந்தனர். அவர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு வசதியாக முக்கிய இடங்களில் இருந்து  அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டன.

மாநகர் மற்றும் மாவ ட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று காலை முதல் ஏராளமான  பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய குவிந்தனர். ஆனால்  ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டும் டோக்கன்கள் வழங்கி பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே டோக்கன் விநி யோகிக்கப்பட்டு பத்தி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால்  பலர் ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர்.

திருப்பூர் பழைய பஸ் நிலைய காய்கறி மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட் ஆகியவற்றில் காய்கறி கடைகள், மளிகைகடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இருப்பினும் நடமாடும் வாகனங்கள் மூலமும் பொதுமக்களுக்கு காய்கறிகள் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

காய்கறி, மளிகைகடைகள் திறக்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் இன்று காலையிலேயே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை,  தாராபுரம், பல்லடம்,  மடத்துக்குளம், காங்கேயம், குண்டடம் உள்ளிட்ட அனைத்து  இடங்களிலும் இந்த நிலைமை காணப்பட்டது. 

இருசக்கர, 4 சக்கர வாகனங்களில் கடைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் பெரும்பாலான பொதுமக்கள் வாகனங்களிலேயே கடைகளுக்கு சென்றனர். இதன் காரணமாக  இவ்வளவு நாட்கள் வெறிச்சோடி  காணப்பட்ட சாலைகள் இன்று பொதுமக்களால் பரபரப்பாக காணப்பட்டது.

சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகளில் வியாபாரம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தநிலையில் கண்காணிப்பு குழுவினர் இன்று காலை முதலே திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர். கூட்டம் அதிகமாக காணப்பட்ட கடைகளின் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

தென்னம்பாளையம் மார்க்கெட், பழைய பஸ் நிலைய மார்க்கெட்டுகளில் மாநகராட்சி  அதிகாரிகள்   ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மார்க்கெட்டுகள் முன்பு போலீசார் கண்காணிப்பில்  ஈடுபட்டனர்.  மேலும் மாநகர் மற்றும் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் நேற்றிரவு முதலே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News