செய்திகள்
மேட்டூர் அணை

34 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

Published On 2019-08-26 03:54 GMT   |   Update On 2019-08-26 03:54 GMT
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 34 நாட்களுக்கு பிறகு மீண்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர்:

கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

அதிகபட்சமாக 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்ததால் கடந்த மாதம் 23-ந் தேதி 39.13 அடியாக இருந்த மேட்டூர்அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 117.30 அடியாக இருந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று 10 ஆயிரத்து 901 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 10 ஆயிரத்து 10 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 34 நாட்களுக்கு பிறகு மீண்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

நேற்று 117.30 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 117.25 அடியாக சரிந்தது. இதனால் இனிவரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காத பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News